சொல்

சொற்களொவ் வொன்றும் சொலிக்கின்ற மந்திரங்கள் !
சொற்களொவ் வொன்றும் சுடர்வெளிச்சம் ! - சொற்களொவ்
வொன்றும் பலிக்கும் ஒலியாகும் ! சொற்களொவ்
வொன்றும் மதிப்புடைய தோர் ! 


சொல்கின்ற சொல்வெற்றுச் சொல்லல்ல, நெஞ்சத்தின்
வெல்கின்ற எண்ண வெளிப்பாடே - சொல்கின்ற
சொல்லில் ஒளியிருந்தால், சொன்ன இதயத்துள்
இல்லையென் றாகும் இடர் !

சொல்லில் உயர்வென்னும் சோதி இருந்துவிட்டால்
கல்லாமை கூடக் கவலையிலை ! - பொல்லாப்
பிழைசொல்லில் சேருமெனின் பீடு மழுங்கும் !
விழைவதெலாம் சொல்லிடுதல் வீண் !

எண்ணும் பொருளை எடுத்துடனே சொல்லுகின்ற
வண்ணம் உயர்ந்தார் வழக்கமன் ! - றெண்ணியதை
நுண்ணறிவோ டுற்று நுகர்ந்து மொழிவதுவே
மண்ணகத்தில் வெற்றிகொண்டார் மாண்பு !

சொல்லில் தெளிவின் சுமைதோன்ற வேண்டுமெனில்,
கொல்க ! பிழைப்பேய் கொளுத்திடுக ! - நல்லதையே
எண்ணெய் எனப்பெய்க ! எல்லாமே நம்வசம் !
எண்ணமே சொற்கள், எழுத்து !

-விவேக்பாரதி
16.03.2017

Popular Posts