அன்னையும் பிள்ளையும்

கையிற் கரும்புடன் கண்ணி லருளுடன்
       காமாட்சி அன்னை அமர்ந்திருப்பாள் - அவள்
  கவிதை எனும்ரத மேறி வெளியெலாம்
       காட்சிக்கொ டுத்திட வந்திருப்பாள் !
மெய்யில் திகழ்ந்திடும் மாலை அணிகலன்
       மெச்சிட அம்பிகை தாள்பதிப்பாள் - உளம்
  மேன்மை அடைந்திடச் சேத முடைந்திட
       மென்னகை யாக அருள்விரிப்பாள் !

அவள் அன்னை அல்லவோ !
நான் பிள்ளை அல்லவோ

ஒற்றைக் கிளியுடன் ஓங்கும் மலர்களின்
       ஒண்மையி லேயவள் வீற்றிருப்பாள் - எனை
  ஒன்றி அணைத்தொரு முத்த மழைதர
       ஓம்சக்தி யென்றசொல் லேற்றிருப்பாள்
நெற்றித் திலகமும் நெய்த கருங்குழல்
       நேர்த்தியும் நெஞ்சில் நிலைத்திடவே - வந்து
  நேரும் பழவினை தீரும் வழிவகை
       நேரினில் நின்று மொழிந்திருப்பாள் !

அவள் அன்னை அல்லவோ !
நான் பிள்ளை அல்லவோ !

நெஞ்சத் தகழியில் நீளும் சலனங்கள்
       நெளிந்தி டாமல் காத்திடுவாள் ! - ஒரு
  நெருப்பி னுருவத்தை ஏந்தி மனமெனும்
       நெருக்கும் காட்டை எரித்திடுவாள் !
பிஞ்சுக் கைவிரல் பிடித்து நடந்திட
       பிழையில் லாத வழிதருவாள் - உள்ளில்
  பீறிக் கொண்டெழும் எண்ணக் குதிரைகள்
       பிய்த்துத் தின்றிட மொழிதருவாள் !

அவள் அன்னை அல்லவோ !
நான் பிள்ளை அல்லவோ !

-விவேக்பாரதி
07.06.2017
 

Comments

Popular Posts