வெள்ளைத் தாளில்

வெள்ளைக் காகிதத் தாளி லிருப்பாள்
   விசையோ டெழுதிடுங் கோலி லிருப்பாள்
விள்ளும் அமுதாய் விளங்கிடும் பாவில்
   விஞ்சும் அழகென விந்தை படைப்பாள்
கள்ளை யொத்த இசையி லிருப்பாள்
   கவிஞர் நெஞ்சக் கனலி லிருப்பாள்
பிள்ளை மழலை யுரைக்கும் மொழியில்
   பிடரி விரித்தே எழில்நட முற்றாள் !

காதல் கொண்டவர்க் கல்வியி லுள்ளாள்
   காற்றில், கடலில், புனலொடு, வானில்
மோது மொலியி லிருப்பிடங் கொண்டாள் !
   மொய்க்கும் சுடராய் நல்லுருக் கொண்டாள் !
வாதம் தர்க்கம் நிகழு மிடத்தில்
   வாய்மை விட்ட வழிதனி லுறுவாள் !
நீதி, நியாயம், சமத்துவந் தன்னில்
   நித்தம் மகிழ்ச்சி நிகழ்ந்திடச் செய்வாள் !

தாய்மை, பெண்மையோ, டாண்மையு மென்றே
   தனித்த பற்பல தன்மைகள் கொண்டாள் !
நோய்மை தீர்த்திடும் தூய்மை மருந்தாய் !
   நூதனப் பாவையி னருளொளி கண்டோம் !
ஏய்க்கும் கயவரு மெட்டிந கர்ந்திட
   எடுக்கும் வாளின் விசையவ ளானாள் !
வாய்மை மாற வளமறு மென்றே
   வனப்பொடு சொல்லும் மனத்தின ளானாள் !

தீதில் நன்றில் திறம்படச் சொல்லும்
   தீந்தமிழ்க் கவிதையி னுள்ளொலி யாவாள் !
மாதாய், விலங்காய் மனிதரு மானாள்
   மண்ணில் அனைத்தும் தனதெனக் கொண்டாள் !
யாதும் அவளென ! எங்கும் அவளாய் !
   யாண்டும் அவளென ! யாங்கண் டிடவே
தோதாய் வந்துடன் தோன்றிடு வாளைத்
   தொட்டுண ராவிடில் வாழ்வொரு வாழ்வோ??

அன்னாள் சக்தி ! அனைத்திலு முள்ளாள் !
   அருமைக் கெல்லாம் அரும்பொரு ளானாள் !
இன்னான் இவனென் றிருந்திடக் காணாள் !
   இயக்கம் அவளே ! இயங்குதல் நாமாய் !
என்னை யுன்னை உலகினைக் கொண்டே
   எழிலா யாட்டம் இயற்றுவள் தேவி !
உன்கடன் மட்டும் உணர்வொடு செய்தால்
   உயர்ந்தவள் தாளினில் உய்தலுந் திண்ணம் !!

-விவேக்பாரதி
28.10.2016

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி