வாழ்வாய் நெஞ்சே !


என்றுமுனக் கிதுசொல்வேன் என்றன் நெஞ்சே !
   ஏழைபோல் இனிமருள்தல் நிறுத்தி வைப்பாய் !
தென்றலென உனைத்தீண்டிக் குளுமை தந்து
   தேவையெலாம் தீர்த்துவிடத் தாயு முள்ளாள் !
மின்னையொரு கொடியாக்கி விண்மீன் தம்மை
   மிளிர்கின்ற மணிகளெனத் தரித்தி ருப்பாள் !
கன்னலதன் சாற்றினைத்தன் குரலிற் கொண்டாள்
   கலைமூக்குக் குத்தியென நிலவைக் கொண்டாள் !

தத்துவங்கள் அனைத்தினுக்கும் முடியா மந்தத்
   தாயிருக்கும் தத்துவத்தை அறிவாய் நெஞ்சே !
சுத்தசிவம் வைணவம்கௌ மாரம் சாக்தம்
   சௌரங்க ணாபத்யம் ஸ்மார்த்த மென்றே
அத்தனைக்கும் உகந்ததுதான் சுயத்தின் ஞானம்
   அதையுணர சக்தியதன் விளக்கம் வேண்டும் !
இத்தனைக்கும் உழலாமல் உன்றன் வேலை
   இயற்றிக்கொண் டேயிருந்தால் வெற்றி காண்பாய் !

எல்லாமும் நீயாக எண்ணங் கொள்வாய் !
   எனதென்று யாதையும்நீ ஏற்றி டாதே !
கல்லாமல் இருப்பதுபோல் பாவ மில்லை
   கண்மூடிச் செல்வதெலாம் பாதை யாகா !
நில்லாமல் அன்றாடம் திரிந்து லாவி
   நீயிருக்கும் செய்கையினால் பயனும் இல்லை !
சொல்லாலும் மனத்தாலும் தேகத் தாலும்
   ஜோதிமயம் கண்டிடலாம் அமைதி கண்டால் !

இந்தநிலை ஓர்ந்திடுவாய் இயக்கம் கண்பாய் !
   இடிதாங்கும் வலிமையெலாம் நீயும் பூண்பாய் !
சொந்தமென இவ்வுலகில் எதுவு மில்லை
   சொத்தென்று படுவதெலாம் தொடரும் ஊழே !
எந்தநிலை எய்திடினும் யாவ ருக்கும்
   ஏற்றவனாய் நல்லவனாய்த் தோன்ற வேண்டில்
பந்தினைப்போல் துள்ளாமல் பக்கு வத்தின்
   பாடத்தைக் கற்றிடுவாய் ! பலமுங் கொள்வாய் !

எப்போதும் ஒன்றேபோல் இருத்தல் தீர்வாய் !
   எந்நாளும் புதியவுரு புதிதென் றேதான்
செப்புகநீ ! வருங்காலம் தன்னை யெண்ணி
   செலவாக நிகழ்காலம் கழித்தி டாதே !
இப்பொழுதை இன்றேநீ வாழ்வாய் ! நாளை
   இனிதாகும் அதுபற்றி எண்ணல் வேண்டா !
தப்பாது சக்திபெயர் சாற்றிச் செல்வாய் !
   சங்கடங்கள் நேராது ! வாழ்வாய் நெஞ்சே !

-விவேக்பாரதி
06.05.2017

Comments

Popular Posts