களம் நோக்கி

கிளம்பிவிட்டேன் நானும் கிளர்ச்சிக்கு ! சேர்ந்த
இளைஞர்கை யில்பார் இயக்கம் - களங்கமிலை
எந்தவொரு கட்சியும் ஏற்றவிலை இந்நெருப்பு
முந்துமிள வர்க்க முனைப்பு ! 


முனைப்பொடு நாளும் முயற்சிதான் செய்தால்
நினைப்பது யாவும் நிலைக்கும் - மனத்தினுளே
ஏறுதுபார் வீரத் தெழில்கொடியும் ! காளைகள்
சீறுதுபார் கூட்டத் திருந்து !

திருந்திடென் றேதான் திமிருடன் சொல்லி
மருந்திட வந்த மனத்தார் - பொருந்தியே
வந்திட்ட கூட்டம் வயம்பெறவே ஒன்றிணைவீர்
பந்தத்துத் தீபோல் பனைந்து !

பனைமரத் தோப்பாய் பசுமரக் காடாய்
அனைவரும் சேர்ந்த தருமை - தினந்தினமுன்
சேர்கின்ற கூட்டச் செழுமைக் களவில்லை
பேர்கின்ற மண்சொல்லும் பேர் !

பேருக்குச் சேர்வதில்லை பேராண்மை யாளர்கள்
ஊருக்குச் சேர்கின்றார் உண்மையிலே - நீருக்கும்
நல்லுழவன் சாவிற்கும் நாடுண்ணும் ஊழலுக்கும்
எல்லோரும் சேர்த்தால் எதிர்ப்பு !

("ஜல்லிக்கட்டு" வேண்டி போராட்டம் நடந்த மெரினாக் களத்திற்குச் செல்லும் வழியில் எழுதியது)

-விவேக்பாரதி
17.01.2017

Popular Posts