மகளிர் மாண்பு

பாரதி கலைக்கழகத்தின் கவியரங்கில் இன்று நான் படைத்த பாடல் !


காலைப் பொழுதியக்கும் காட்சிகளில் எல்லாமே
சேலை நனைந்திருக்கச் செக்காய் உழைத்தோடி
மூலையிலே நின்று முறுவலொடு கையசைக்கும்
வாலை மகளிரது வண்ணங்கள் பாடுகின்றேன் !
வீட்டை அளக்குங்கால் ! விந்தை சமைக்குங்கை !
ஏட்டை விளக்கும்வாய் ! எல்லாம் படைக்கும்மெய் !
தன்சொத்தாய்க் கொண்டே தரணி இயக்குகின்ற
மன்பெரிய சக்திகளாம் மங்கையரைப் பாடுகின்றேன் !
மீசை முளைத்ததனால் ! மீறும் துடிப்பதனால் !
ஓசை கணப்பதனால் ஓங்கிவிட்டோ மென்றரட்டும்
ஆணுக்கு மத்தியிலே அஞ்சா தெழுச்சியினைப்
பூணும் மகளிர் புகழ்தம்மைப் பாடுகின்றேன்
காவியம் தொட்டு கதைமுதலாய்ச் சொல்வதெல்லாம்
ஆவதும் பெண்ணால் அழிவதுவும் பெண்ணால்தான் !
பெண்ணை மதியாதார் பேரிடரில் வீழ்வரென
எண்ணற்ற முன்னோர்சொல் எல்லாம் உரைக்காதோ ?
என்னென்ன பெண்தருவாள் என்றே அடுக்கிடிலோ
பொன்னுலகம் நிச்சயமாய்ப் போதாது ! மங்கையரால்
காதல், கவிதை, கனவு, கலவியொடு
வேதம், தெளிவு, வெலும்சக்தி சித்திபெறும் !
பெண்ணின்றேல் செய்யுட்கள் பேசப் பொருளுண்டோ ?
எண்ணத்துக் கற்பனைகள் ஏற வழியுண்டோ ?
நங்கை வரவின்றி நாடகங்கள் சென்றிடுமோ ?
இங்கே புவியில் இவர்பிறப்பும் இல்லையெனில்
மண்ணுயிர்கள் தோன்றி மகிழ்ந்திருக்கக் கூடிடுமோ ?
கண்ணுக் கழகாய்க் கவரும் விருந்துண்டோ ?
நம்நலத்தைத் தன்னலமாய் நாளும் நினைப்பதிலே
அம்புவிமேல் பெண்டிர்போல் ஆன பிறப்புளதோ ?
நல்லழகு, நேர்த்தி, நடையழகு, வெல்கின்ற
சொல்லழகு கொண்டு சொலித்திடுவோர் பெண்ணன்றோ ?
தாயாய்த் தமக்கையாய்த் தங்கச்சி இல்லாளாய்ச்
சேயாய் ஆசானாய்ச் சேரும் உறவுகளாய்
நட்புக்குத் தோழியாய் ! நம்பிக்கைக் கோருருவாய்
வெட்கக் களஞ்சியமாய் ! வேறுபடும் மங்கையர்கோ
எத்தனை தோற்றங்கள் ? எத்தனை ஏற்றங்கள் ?
எத்தனை எத்தனை ஏகாந்தப் பாத்திரங்கள் ?
அக்கறை மேற்கொள்ளல் ஆசை மொழிசொல்லல்
பக்க பலமாதல் பார்வையிலே சாய்த்தல்
அழகியலை ஏந்திடுதல் அன்பு பெருக்கி
மழையெனப் பெய்தல் மரியாதை கொண்டுய்தல்
கண்ணீர் மொழிதல் கலைவளர்த்தல் என்றுபல
பெண்ணின் குணங்களெனப் பேசப் படும்பொழுதில்
ஆருக்கு மஞ்சாமல் ஆண்போல் தொழில்புரிதல்
நீருக்குள், வானத்தில் நின்று புகழ்படைத்தல்
வாகைபல சூடிடுதல் ! வன்மை வளர்த்திடுதல்
சோகமிலா நல்வாழ்க்கைச் சொர்க்கம் தனைவிழைதல்
ஊர்சுற்றல் எப்போதும் உற்சாகத் தோடிருத்தல்
நேர்கண்டு பேசல் நெருப்பாய் விழிநிறுத்தல்
என்றுபல வுங்காட்டி எக்காள மிடுகின்ற
வன்மைக் குயருவாய் வாழ்த்தும் பெறுகின்ற
நூதனப் பெண்மக்கள் நுண்ணறிவைப் போற்றுதற்குக்
காதலொடு வந்தாலே கைதட்டல் நூறுவரும் !
வானம் அளக்கின்றார் ! வாகனங்க ளோட்டுகிறார்
கானம் இசைக்கின்றார் ! கார்ப்ரேட்டில் வாழ்கின்றார் !
ஆண்செய்யும் செய்கைகள் அத்தனையும் செய்கின்றார்
ஆண்செய்தி டாத அதிசயமும் செய்கின்றார் !
பாடம் படிக்கின்றார் ! பாரிதனை ஆள்கின்றார் !
வேடம் புனைந்து வெளித்திரையில் தோன்றுகிறார் !
பெண்ணில்லா தோரிடந்தாம் பேரண்டத் தேதென்ற
எண்டிசையும் வாழ்த்திடவே ஏற்றவினை செய்கின்றார் !
எங்கும் அழகாய் எதிலும் நேர்த்தியதாய்
தங்கமெனத் தோன்றி தழைத்து மிளிர்கின்றார் !
ஆகாகா ! என்னே அணங்கினத்தார் மாண்பெல்லாம்
வாகாய் அதையடுக்கி வார்க்கும் வலிமையிலேன்
ஆதலினால் பெண்மை அருள்பெற்று வாழ்கவெனச்
சேதமிலா நற்கவிதை செப்பி முடிக்கின்றேன் !
"பெண்மை வளர்க ! பெருமையொடு வாழ்ந்திடுக !
கண்ணாய்ப் புவியனைத்தும் காத்திடுவோர் வாழியவே !"


- விவேக்பாரதி
19.03.2017

Popular Posts