தீரா வேட்கை


போராளி ஒருவனது சிந்த னைகள்
    போகாமல் காற்றினிலே நிலைத்தி ருக்கும் !
தீராத வேட்கையினோ(டு) இருக்கும் சிந்தை
    திண்ணமுடன் அதையேற்று வழி நடத்தும் !
வீராதி வீரரெலாம் இறப்ப தில்லை !
    வித்தகர்கள் ஒருபொழுதும் மாள்வ தில்லை !
ஆராத சினமில்லை என்பதைப் போல்
    அழியாத வேட்கைகள் அழிவ தில்லை !


மரணத்தை வெல்கின்ற வழியைத் தேடி
    மக்களெலாம் ஏங்குகின்றார் ! மரணம் நேரும்
தருணத்தில் அஞ்சாமை வெல்வதாகும் !
    தம்முடல் தான் காலத்தால் பிறிந்திட் டாலும்
உரைக்கின்ற சொற்களாலும் கொள்கை யாலும்
    உலகத்தில் வாழ்பவரே மரணம் வெல்வார் !
இருக்கின்ற வரை உண்மை புரிவ தில்லை !
    இங்கெடுத்துச் சொன்னாலும் கேட்ப தில்லை !

-விவேக்பாரதி
13.07.2017

Comments

Popular Posts