கவிதை இயற்றும் கலை

உள்ளுக்குள் எங்கேயோ ஊற்றெடுக்கும் மின்னலொளி !
கள்ளைச் சுமந்தே கவர்கின்ற பாத்திரம் !
ஆழ மனதுக்குள் ஆண்டவன் மீட்டுகின்ற
யாழின் இசையமுதம் ! யௌவனத்தின் கண்ணாடி !
கண்ணாறக் கண்டவொரு காட்சிக் கெதிர்பதிலாய்
உண்டசொற் கோவை உமிழும் எரிமலை !
பாயும் உணர்ச்சி படியும் வடிகட்டி !
சாயும் மனதுக்குச் சன்னல் வரவேற்பே !
எக்காள மிட்டுவரும் எண்ணக் குதிரைக்கு
மிக்கவொரு தோதாய் மிளிரும் கடிவாளம் !
தூவல் இதழ்மேலே தூவுகின்ற முத்தமழை !
தேவர் இயற்கையொடு தேர்ந்து சொலும்பாஷை !
உண்ணல், உடுத்தல், உறங்கிடுதல், ஈதலெனக்
கொண்ட கடமைக் குவியலுளே, எங்கட்
கவள்தந்து நிற்கும் அரியகடன் தானிக்
கவிதை இயற்றும் கலை ! 


-விவேக்பாரதி
21.03.2017

Popular Posts