எங்கள் மாரி

எங்கள் முத்து மாரி யம்மை
    எட்டு திக்கும் காப்பாள்
எங்கள் முத்து மாரி யம்மை
    ஏழு கண்டம் கோப்பாள்
சிங்கம் மீது லாவும் மாரி
    சிறுமை எண்ணம் மாய்ப்பாள்
தங்க முத்து மாரி கெட்ட
    தர்க்கர் தம்மை ஏய்ப்பாள் !


தீயி னோடும் வளியி னோடும்
    திமிரு மெங்க ளம்மை !
வாயி லாடும் வார்த்தை யாக
    வாழ்வ தெங்க ளம்மை !
மாய மான நெஞ்சி னாட்டம்
    மாற்றம் செய்வ தம்மை !
காயு மம்மை கனியி லம்மை
    கவிதை செய்வ தம்மை !

போக மெங்க ளம்மை ! நல்ல
   போதை எங்க ளம்மை !
யோக மெங்க ளம்மை ! மதியின்
    யோச னைக ளம்மை !
வேகம் நல்கி வேதம் நல்கி
    வேண்டும் யாவும் நல்கும்
நாக மோதி ரந்த ரித்த
    நங்கை எங்க ளம்மை !

அச்ச மற்ற ஆண்மை நெஞ்சம்
    ஆக்கி வைப்ப தம்மை
உச்சி ஆளும் வர்க்கத் தினினும்
    உயர்ந்த மான மென்னும்
அச்சி னுக்கு ளொளிரு மம்மை !
    அன்புத் தெய்வ மம்மை !
பிச்சை கேட்ட தேவர்ப் பாகப்
    பச்சை யெங்க ளம்மை !

ஆட்ட மாடும் கேட்டி னுக்கும்
    அந்த மெங்க ளம்மை !
வாட்டு கின்ற கலியில் வலிமை
    வார்க்கும் சோதி யம்மை !
பூட்டு மம்மை சாவி யம்மை
    புதிரு மெங்க ளம்மை!
பாட்டி சைத்துப் போற்று வோர்க்குப்
    பலம்கொ டுக்கு மம்மை !

-விவேக்பாரதி
20.02.2017

Popular Posts