சிவந்த கண்கள்
அழவைத்த ஓவியம் - கவிதை
எழவைக்கிறது !
வாணி என்றும் தேவி என்றும்
வளமை லக்ஷ்மி என்றெலாம்
வாழ்த்தி வாழ்த்தி வாலை மீது
நாணி நம்மைத் தலைக விழ்க்க
நங்கை இங்கு பார்க்கிறாள்
நல்ல மாந்தர் தம்மை இந்த
நங்கை பார்வை கொல்லுமே !!
தூணி டத்து சாய்ந்து வந்து
துவளு கின்ற கொடியினைத்
துட்ட எண்ணம் கொண்டிங் கந்தத்
தூணும் தீண்ட நினைப்பதோ ??
ஆணி கொண்ட கூர்மை தன்னை
அந்தக் கண்ணில் காணடா
ஆணி னத்தை தாழ்த்த வைக்கும்
அற்ப புத்தி ஏனடா ?
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
மங்கை தம்மைக் கொடுமை செய்யும்
மதியி னைக்கொ ளுத்துவோம்
காத லென்ற பேரில் இங்குக்
கன்னிப் பெண்ணின் தேகத்தில்
கயமை செய்ய நினைக்கும் போது
கண்க ளைக்கொ ளுத்துவோம்
நீதி யென்று சேதி யென்று
நித்த நித்தம் பேசியே
நீச எண்ணம் கொண்டு வாழும்
நீச ரைக்கொ ளுத்துவோம் !
ஓதி மல்லி வாட வில்லை
ஒண்ண கையாள் வாடினாள் !
ஓவி யர்கை விந்தை யந்த
வொற்றைப் பார்வை தீயடா !
-விவேக்பாரதி
31.12.2016