இரத்த தானம்

தானத்தில் சிறந்ததெது வென்று கேட்டால்
     தயங்காமல் அன்னத்தின் தான மென்பார்
தானத்தில் அதற்கடுத்த வுயர்ந்த வொன்றாய்த்
    தாய்கர்பப் பைதானம் என்று சொல்வார்
வானவரும் செயற்கரிய தான மாக
    வள்ளல்கள் தாராத தான மாக
மானிடவர்க் குதவுமுயர் தான மென்றால்
    மாப்பெரிய குருதிதரும் தான மன்றோ ?


இரத்தத்தின் அழுத்தத்தைப் பரிசோ தித்தும்
    இருக்கும்நா டித்துடிப்பின் அளவு பார்த்தும்
மருத்துவரின் குறிப்புகளை ஆலோ சித்தும்
    மனிதரத்த வகைதெரிந்து மதைப்பி ரித்தும்
உரியதொரு நல்லூசி, பைகொ டுத்தும்
    உயர்வான படுக்கையினை நமக்க ளித்தும்
பரிவோடிங் களிக்கின்ற உபசா ரம்போல்
    பாருக்குள் தருவபவர்யார் ? கொடைய ளிப்போம் !

முதலில்நம் நிலைதன்னை அமைதி யாக்கி
    முறுக்குமொரு பட்டையினால் கையி றுக்கி
மெதுவாகக் கைதட்டி நரம்பெ ழுப்பி
    மெலிந்தமுனை ஊசிதனை நரம்புக் குள்ளே
பதமாகக் குத்திவிட்டு வலியைக் கேட்டுப்
    பக்குவமா யுடனமர்ந்து பேச்சு தந்தே
இதமாக வெறுப்பின்றி உதவி செய்யும்
    இயல்புதனைச் செய்பவர்யார் ? கொடைய ளிப்போம் !

முடிந்தவுடன் ஊசிதனை எடுத்து விட்டு
    முறுவலொடு பஞ்சொன்றால் கைம டக்கி
உடன்பழத்தின் சாறுதந்து நன்றி சொல்லி
    உண்மையில்நாம் வள்ளலென வுணரச் செய்தே
"அடுத்தினோர் முறைதருக" வென்று சொல்லி
    அளித்திட்ட நம்மிரத்தம் தன்னை வேறு
வடிவான கலன்தன்னில் பாது காத்து
    வாழ்வுதர வைப்பவர்யார் ? கொடைய ளிப்போம் !

தருவதுவோ சிறிதளவுக் குருதி மட்டும்
    தந்ததுவும் சிலநாளில் சுரந்து நிற்கும் !
தருவதனால் பெறுவதுவோ உடலில் நன்மை,
    தாக்குண்டால் காக்கின்ற எதிர்ப்பு சக்தி,
ஒருவர்க்கே னும்முதவி செய்தோ மென்னும்
    ஓங்கியநல் லெண்ணமினி உதவும் உள்ளம்,
பெருமதிப்பு, மரியாதை, முகத்தில் தேசு,
    பேறு,ஆத லால்குருதிக் கொடைய ளிப்போம் !

-விவேக்பாரதி
23.02.2017

Popular Posts