கவியாத்திரை

சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவில்லத்துக்கு முதல்முறை சென்ற பொழுது...

கடும்பனி சூழ்ந்த காலை நேரம்
கடுக்கினேன் யானும் கவியாத் திரைக்கே
யாத்திரைப் பயனை யானடை வேனோ ?
நேத்திரம் வழிய நெறியடை வேனோ ?
என்றல் லாம்நான் எண்ணிய வாறு
சென்றேன் அந்த செழும்வழி தன்னில்
தூரம் இல்லை தொல்லை இல்லை
நேர விரையம் நிச்சயம் இல்லை
தனிவழிப் பயணம் தானது மில்லை
இனிமை நினைவுகள் இயற்றிடும் பயணம்
திருவல்லிக் கேணி திருமால் பதியாம்
அருள்விளை இடமாம் அங்கென் பயணம்
மீசை முளைத்து மிளிர்ந்திடும் காலம்
ஆசை நெஞ்சில் அரும்பும் பருவம்
கல்வியி னோடு கழிக்கா தடியேன்
சொல்விளை யாட்டுக் கவியோடு கழித்தேன்
என்தா யாகி எந்தையு மாகி
உன்னத மான உடன்பிறப் பாகி
நண்பனு மாகி நானெனைக் காணப்
பண்ணமு தீந்த பாரதி வாழ்ந்த
இல்லம் நோக்கி இன்றென் பயணம்
இல்லம் சென்றது எதற்கெனக் கேண்மின்
இன்றவ னுக்குப் பிறந்தநாள் ஆதலால்
பொன்னொளி வீசும் பொற்புடை உருவைக்
கட்டிட தழுவிக் கவிதை முத்தம்
இட்டுச் சிறந்த இமையவ னாகத்
தோன்றிட வேண்டித் துவங்கிய பயணம்
ஆன்றவன் தரிசனம் அமைய பெறுமோ ?
என்னைக் கண்டதும் ஏனடா வந்தாய்
இன்னலாய் என்றே இயம்பிடு வானோ ?
அப்பன் எனநான் அவனைக் கொண்டென்
அற்பப் பெயரில் அவன்பெயர் சேர்த்த
காரணம் கேட்டுக் கனல்விழிப் பார்வை
வீரியத் தோடே வீசிடு வானோ ?
என்கவி கேட்டால் ஏளன மாகப்
புன்னகை பலவும் புரிந்திடு வானோ ?
எத்திறத் தாலே எழுதிட வந்தாய்
இத்தரை மீதென் றிகழ்ந்திடு வானோ ?
எனப்பல பேசி எளியவன் சென்றேன்
மனத்துளே ஐயம் மலிந்திட விருந்தேன் !
பாரதி யைநான் பார்க்கும்முன் பார்த்த
சாரதி யாணைத் தரிசனஞ் செய்தேன் !
என்னே அழகடா என்னே ஆண்மை
என்னே முறுக்கிய எழிலாள் மீசை !
கும்பிட வந்தக் கூட்ட மிகுதியால்
நம்பியான் வெளியி லிருந்து பார்த்தேன் !
பின்னவன் மார்பில் பிரியா துறைந்த
அன்னையாம் வேத வல்லியைக் கண்டே
ஆனந்தக் கூத்திட் தகத்தில் மகிழ்ந்தேன்...
நானந்தக் கோயில் நனிப்பின் வாசல்
வழியாய் வந்து வலப்புறம் திரும்பி
மொழியாள் மன்னன் முழுதாய் வாழ்ந்த
இல்லம் கண்டேன் இதயத் துடிப்பில்
சொல்லும் சந்தமும் சொக்கிடக் கண்டேன்
நேரே நடந்தேன் நேர்த்தி மிகுந்த
சீருடை வாயிற் சிறப்பினைக் கண்டேன்
பொன்னுரு வச்சிலை பொலிந்திடக் கண்டேன்
என்னுரு விழந்தங் கவனுரு கண்டேன்
எனக்குள் அவனே எழுந்தாற் போல
மனத்துள் மாயை ! மயங்கிப் போனேன்
தானாய் நேராய்த் தலையும் நிமிர
வானாய் மார்பும் வயத்தொடு விரிய
என்கை மீசை இழுத்தனு பவிக்க
பின்னங் கால்கள் பிடறி விரிக்கும்
சிங்கம் போல சீறிப் பதிய
எங்கும் எங்கும் எங்கும் சக்தி
இருப்பைக் கண்டுளம் இறுமாப் படைய
நெருப்புப் பார்வையென் நேத்திரத் துறைய
ஆடிக் கிடந்த அற்பச் சிறுமனம்
மூடிக் கிடக்க ! முழுமை அமைதியாய்ச்
சுற்றிச் சுற்றிச் சுடர்கொளப் பார்த்தேன்
சற்று கிறங்கிச் சட்டெனத் தெளிந்தேன் !
முன்னம் எழுப்பிய மூடக் கேள்விகள்
என்நெஞ் சகன்றே எட்டிச் செல்லத்
தெளிந்து கொண்டேன் தேவன் என்னை
ஒளிப்பான் பாரதி ஒருபார் வையிலே ! 

உள்ளே சென்றதும் உணர்வு கலங்கிக்
கள்ளைக் குடித்த கயவன் போலே
நடந்த கதைகள் நன்கறி வீர்கள்
கடந்தவன் சிலைக்குக் கைமேல் தூக்கிப்
பெருமை வணக்கப் பெருங்குவை யிட்டே
அருமைச் சிலையின் அழகுக் கன்னம்
சிவக்கா தென்று தெரிந்திருந் தாலும்
உவப்போ டதிலொரு முத்தமு மிட்டேன்
என்தலை தன்னை ஏறியி ருந்த
பொன்னுருச் சிலையின் கீழே சார்த்தி
கண்ணின் ஓரம் கசிந்திட வெழுந்து
பண்ணின் அரசனைப் பார்வை கொட்டாமல்
பார்த்துப் பார்த்து ரசித்த பின்னர்
ஈர்த்தது அவனுடை இல்லத் தழகும்
பலமுறை சென்று பார்த்ததென் றாலும்
நிலைதனில் புதிதாய் நித்தம் இருக்கும்
பாரதி இல்லம் பாலகன் எனக்கோ
பாரதிக் கோயில் ! பக்தியி னோடே
உள்ளே சென்றேன் உயர்வுட னங்கே
பிள்ளைப் பள்ளிக் கூடம் போலே
தெளிவாய் அழகாய்த் தெரிந்தவர் வைத்த
அளப்பரி தான அழகுடைக் குறிப்புகள்
எல்லாம் எங்கள் பாரதி பற்றிச்
சொல்லவா வேண்டும் திரும்பத் திரும்பப்
படித்துப் படித்துப் பரவசங் கொண்டேன் !
அடிவயி றென்றும் அதட்டிடும் என்னை
உண்டபின் நகரென உத்தர வியற்றும் !
முண்டாசுக் கவிஞன் சன்னிதிக் குள்ளே
அடிவயி றென்ன ஆழ்மனம் என்ன
பொடியாய்ப் போயின அத்தனைக் கட்டும் !
மூலை முடுக்குகள் மூண்ட தூண்கள்
சாலை விளிம்புகள் சாய்சுவர் முற்றம்
எல்லா விடத்திடும் எழிலே உருவாய்ச்
சொல்லாள் நாயகன் சொலித்திடக் கண்டேன் !
மனத்தில் அங்கொரு மதியொளி யெழவே
வனப்பொடு தோன்றிய வரிகள் படித்தேன் !
"பாரத சமுதாயம்" பாரதி பாடல்கள்
வேரடி இலைநுணி முழுவது மாகச்
சிந்தின் தந்தை சிந்திய சொற்கள்
"செந்தமிழ் நாடு" "சக்திவி ளக்கம்"
தம்பிக் கன்னான் தந்த கடிதம்
நம்பிப் பலவாய் நடத்திய இதழ்கள்
படிக்கப் படிக்கப் பசையுறும் வண்ணம்
வடித்த சிலையாய் வனப்பில் எழுத்துகள் !
பாரதி யாரின் படுவழ கான
கூரிய கையெழுத் ததனைப் படித்தல்
அங்கோர் தவமே அழ்ந்து படிக்கத்
தங்கும் புதிரே ! தமிழ்சொல் தன்னைப்
பிரித்துப் பிரித்துப் பிழைவா ராமல்
உரித்த சொற்கள் உன்னத வேதம் !
எல்லாம் படித்த என்நெஞ் சுக்குள்
சொல்லா டாது போமோ சொல்வீர்
உடனே மனத்துள் உயிர்த்துக்
கடகட வெனவே கவிபொழிந் ததுவே !

-விவேக்பாரதி
11.12.2016

Popular Posts