என்ன சிரிப்பு ??

ஏனடி இந்தச் சிரிப்பு ? - என்னில்
   என்னகண் டாயுன்னில் இந்த நகைப்பு ?
ஏனடி இந்தச் சிரிப்பு - இந்த
   ஏழைக்கு முன்செய லாலே துடிப்பு !

சுற்றிய கைகளைக் கட்டி - என்னைச்
   சுண்டி இயக்கும் விரல்கள் மடக்கி
உற்றுச் சிரிப்பதும் ஏனோ ? - என்ன
   உண்மையுண் டோவதை என்றறி வேனோ ?

திக்கறி யாப்புது காட்டில் - இந்தச்
   சின்னக் குழந்தையும் பாடிடும் பாட்டில்
தொக்கும் பிழையெது கண்டாய் ? - மிகத்
   தொல்லைத ரும்வணம் வாயிதழ் விண்டாய் !

வாழ்வறி யாதவன் அம்மா ! - என்றன்
   வாக்கனைத்துன் நீ வழங்கிய தம்மா !
ஆழ்ந்த அறிவில்லை அம்மா ! - என்னை
   ஆளுவ துன்கடன் ! அணைமாரி யம்மா !

-விவேக்பாரதி !
18.04.2017

Comments

Popular Posts