பூ விரியும் கணம்

பூவிரியும் கணம் புதிர்பரப்பும் அதைப்
   புரிந்திடும் வழியில்லையே ! - நெஞ்சில்
பாவிரியும் கணம் பகன்றிடக் கூடுமோ ?
   பாலனுக் கறிவில்லையே !
தாவிடும் ஓடையில் தண்ணீரை யன்றியோர்
   தனியர சேதுமுண்டோ ? - நெஞ்சக்
காவினி லேயுன் களிநட மின்றிக்
   கவிதைகள் ஏதுமுண்டோ ? - சக்தி
   கவிதைகள் ஏதுமுண்டோ ?

பூத்திருக்கும் மதி பார்த்திருக்கும் காலை
   புலர்ந்ததும் மறைவதைப்போல் - உன்னைப்
பார்த்திருக்கும் மனப் பாவம் அழிந்தது
   பாடிடும் திறன்வந்தது !
ஆர்த்திருக்கும் மனம் அமைதியில் நின்றது
   ஆனந்தமே வந்தது ! - வினை
கோத்திருக்கும் எனை கொள்கை அகன்றது !
   கோவிலின் சுடர்வந்தது ! - சக்தி
   கோவிலின் சுடர்வந்தது !

வான்மழைக் கேங்கியே வாடிடும் மண்ணென
   வாசலில் வீழ்ந்திருந்தேன் - உள்ளில்
நானெனும் ஆணவம் நாட்டியம் செய்திட
   நாசத்திலே கிடந்தேன் !
தேனெனும் உன்பெயர் தென்றல் உரைத்தது
   தேவைகள் தீர்ந்ததம்மா ! - புதுப்
பானு பிறந்தது ! இருளும் அகன்றது
   பாடல் தெரிந்ததம்மா ! - எனக்குன்
   பாதம் தெரிந்ததம்மா !

-விவேக்பாரதி
11.05.2017

Popular Posts