தாயழகு

காலை எழுப்பிக் கடமை அறிவித்துப்
பாலைப் பருகவைத்துப் பார்த்துக் குளிப்பாட்டி
சீவித் தலைகோதிச் சிங்காரப் பொட்டுமிட்(டு)
ஆவி இனித்திடவே அன்பாக முத்தமிட்டு
மாலை திரும்ப மனத்துக் கிசைந்தனவாய்
கோலப் பலகாரம் கொண்டுவந்து சீராட்டி
வீட்டுப் படிப்பில் விரைவாய் நமக்குதவி
கூட்டி இரவுணவு கூறும் கதைசேர்த்துத்
தூங்கவித்து அப்பாதான் தோன்றும் பொழுதிற்காய்
ஏங்கிக் கடிகாரம் ஏவிடவே காத்திருந்து
பிள்ளை வளரப் பிரியமான தோழியென
உள்ளம் திறந்து உணர்வன சொல்லிவைத்துக்
கள்ளம் அகற்றிமனை காப்பாற்றி வந்ததெலாம்
சேரும் மருமகளின் செங்கையி லேகொடுத்துப்
பேரனுக்(கு) அற்புதங்கள் பெற்ற கதைசொல்லி
ஆரத் தழுவி அணைத்து மகிழ்ந்திங்கே
தன்னழகைத் தான்மறந்து தன்சுற்றம் எண்ணுந்தாய் !
அன்னவளுக் கிஃதே அழகு !!

-விவேக்பாரதி
29.06.2017

Popular Posts