நீ உறங்க


நீ உறங்க வேண்டுமென்றால்
தீ உறங்க வேண்டுமடா ! - உன்
தீ உறங்கும் வேளையிலே
நீ உறங்க வேண்டுமடா !

கண்ணிரண்டும் இமைச்சிறையில்
   களிநடங்கள் தொடர்ந்திசைக்கும் !
எண்ணமெனும் குதிரைகள்தாம்
   எக்காள மேகொடுக்கும் !
வண்ணவண்ண நாட்டியங்கள்
   மூச்சுவழி தினமிருக்கும் !
மண்ணிலிவை தீர்ந்துவிட்டால்
   மத்தளங்கள் உனையிசைக்கும் !

உள்ளிருக்கும் உஷ்ணத்தைத்தான்
   உண்மைசிவம் என்றுரைப்பார்
நள்ளிரவில் நடுபகலில்
   நடனமிடும் சக்தியென்பார்
கொள்ளையிடக் கூடிடுமோ ?
   கோபநடம் தாங்கிடுமோ ?
இல்லையிந்த ஜோதியென்றால்
   இகவாழ்வு தங்கிடுமோ ?

உடல்வளர்க்கும் செய்கையினால்
   உயிர்வளரும் கண்டுசொன்னார்
விடைவளரக் கேள்விகளின்
   விசைவேண்டும் உண்மையன்றோ ?
தடையுடைத்து மனம்செல்லவும்
   தனதானை தனைவெல்லவும்
கடைதிறந்து வாழ்ந்துவிடு !
   கவலையிலை வீழ்ந்துவிடு !!

-விவேக்பாரதி
11.07.2017

Popular Posts