தவமகனை தாய் பிரிந்தாள்


கதிரவன் உதியாக் கருநிறக் காலை
சதிர்படும் அந்தச் சமவெளிப் பனியின்
பால்நிறம் அன்ன பளிங்கு நிறங்கொள் 
காலுடன் ஏகும் கருநிற நாராய்!
பெருமல கொன்றில் பெட்புற விளங்கும்
உருமீன் ஏந்தி உச்சியில் செல்வோய்! 
உனதரும் கூட்டம் ஓய்விடம் எல்லாம் 
முனமுரை செய்ய மொழியுள திதுகேள்,
 
எனதருந் தலைவன், ஏவு கணையன், 
விண்ணை அளந்த விஜயன், வீரன், 
கண்ணில் கருவம் காட்டா மனிதன், 
அப்துல் கலாம்எனும் அதிசயக் காரன், 
ஒப்பிலாத் தலைவன், ஒழுகிய பண்பன், 
தலைமுடி கவிழ்ந்தும் தலைகவி ழாதே
நிலையது வாய்த்த நித்திய மௌனி, 
வீணை பழகும் விரலழ குடையோன், 
ஆணைகள் அன்பாய் அவழ்த்திடும் மன்னன், 
அழகுற உன்போல் அக்னிச் சிறகை 
எழவே விரித்த எரிகணை மைந்தன், 
தென்றிசை தோன்றி எண்டிசை யெங்கும் 
தன்பெய ரொலிக்கத் தமிழ்சொல் தீரன், 
இந்திய நாட்டை இனிதென ஆண்ட 
சிந்தனை வாதி, சிந்தி மறைந்திட

காலன் எனுமோர் கைவினைக் கலைஞன் 
ஜாலம் செய்யும் சமர்த்தில் பிரித்தான், 
மண்ணில் செயல்கள் மகத்துவம் கண்டு 
விண்ணில் புரிய விருட்டென இழுத்தான், 
ஏவு கணைகள் ஏவிடும் செய்கைக்(கு) 
ஆவதென் றேயவன் ஆவி பறித்தான், 
பேரறி வாளன் புவியைப் பிரிந்து 
ஓராண் டான ஓர்மம் உணர்ந்து 
செல்லும் இடங்களில் சிந்தை நீசெய் 
வல்லோர் இடத்தில் மௌனத் தால்சொல்! 
அவன்புகழ் நாமம் அறைவாய் 
தவமகன் அவனை தாய்பிரிந் தாளே!! 

-விவேக்பாரதி
27.07.2016

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி