கவிதை வருகின்ற நேரம்

சின்னப் பொறியொன்று மெல்லச் சுடராகி
   ஜீவ னெங்கணும் பாயும் ! - அதில்
மின்னல் இடிநாதம் மீறும் புயல்கோரம்
   மீண்டெ ழுந்துவர நேரும்
கன்ன லென்னவரு மெண்ணம் சிலபொழுது
   காரும் உவர்ப்பென்றுந் தோன்றும் - அட
என்ன நேர்கிறது என்ற றிந்திவிட
   எண்ண முடியாத நேரம் !

இதுவும்
கவிதை வருகின்ற நேரம் ! - என்
காளி முகம்தெரியும் காலம் !

சொல்லி னம்புமழை வந்து பாயமனம்
   சோர்ந்தி டாததனை ஏற்கும் - அவள்
வில்லெ னத்தெரியும் நேர மந்தமழை
   விந்தை யானந்த மாக்கும்
செல்லச் செல்லவழி நீண்டு போகுமது
   சேரு மிடமென்ன வாகும் ? - புதிர்
மெல்ல வந்துநம்மை மெல்லும் வேளையுளம்
   மேலெ ழும்பவழி தேடும் !

இதுவும்
கவிதை வருகின்ற நேரம் ! - என்
காளி முகம்தெரியும் காலம் !

எந்த வினைசெய்த திந்த கருமங்கள் ?
   எண்ணி எண்ணிமன மேங்கும் ! - ஒரு
மந்த காசவொளி மெல்லப் புன்னகைத்து
   மடியி ருத்திபதில் சொல்லும்
சிந்தை மாறவழி நேரு மோஅவளும்
   சித்து கள்புரியும் நேரம் ? - பல
விந்தை இந்தசெயல் எந்த நேரத்திலும்
   வீச்சு டன்இதுவும் நேரும் !

இதுவும்
கவிதை வருகின்ற நேரம் ! - என்
காளி முகம்தெரியும் காலம் !

-விவேக்பாரதி
07.06.2017

Popular Posts