எட்டிய சாரம்


நடித்திடநான் பழகிவிட்டேன் நாளெல்லாம் பழகிவிட்டேன்
   நாளுமொரு கவலையிலை என்றே - என்
   நல்லசொற்கள் சொல்லிடுமே இன்றே - பல
அடிவாங்கிப் பழகிவிட்டேன் ஆடியாடி அறிந்துவிட்டேன்
   அகம்மூடப் பழகிவிட்டேன் முன்பே - என்
   அடையாளம் மறைத்துவிட்டேன் பின்பே !

நாளெல்லாம் நாடகமாய் நாம்வாழும் பூமியிலே
   நல்லவரைத் தேடுவதை விட்டேன் - அட
   நானும்கூட தீவினையால் பட்டேன் - இனி
வேளையெலாம் நான்செய்யும் வேலையொன்றே போதுமென்று
   வேஷமிடக் கூடவழி கற்றேன் ! - என்
   வேதனையை நான்மறைத்த லுற்றேன் !

ஆடுகின்ற மனப்பேயை அடக்கிவிட வழிதேடி
   அனுபவமே அந்தவழி கண்டேன் - அதை
   அடையுவழி எனமௌனம் கொண்டேன் - பொருள்
தேடுவதே மனிதகுணம் தேடவைப்ப திறைவன்மனம்
   தேடுதலை விட்டொழிக்க வந்தேன் - என்
   தேவையெலாம் அவனிடத்தில் தந்தேன் !

மேலிருக்கும் வேளைவரை கீழிருக்கும் மூடமனம்
   மேன்மைகளை ஏற்றுவிடத் தோற்கும் - அது
   மேலும்படி கீழிறங்கப் பார்க்கும் - வரும்
தோலிறுக்கம் நேரும்வரை ஓர்குழியில் வீழும்வரை
   தோன்றுவதே இல்லையுயர் ஞானம் - அது
    தோன்றிவிட்டால் போய்விடுமே மானம் !

முன்னிலையில் புகழுபவர் பின்னிருந்தால் இகழுவதை
   முழுவதுமாய் நேரில்கண்டு நொந்தேன் - அது
    முற்றிலும் விஷங்கலந்த செந்தேன் ! - எனக்கு
என்னபணி என்னகடன் ஏதுமறி யாமலுறும்
   ஏழ்மையில் கழித்திருந்த நேரம் - அற
   என்னறிவுக் கெட்டியதே சாரம் !

-விவேக்பாரதி
29.07.2017

Comments

Popular Posts