ஒரு கவிதையின் நீட்சி

கவிதையின் அமரத்துவம் எங்கிருந்து வருகிறது? காலம் தாண்டிய அதன் நீட்சி என்றாலும் அதனை நீட்டுபவர் யார் ? நீட்ட வைப்பவர் யார்? பல கேள்விகள் அதற்கு பலவெறு பதில்கள். இதோ இன்னொரு கவிதை நீட்சி அடைகிறது.

1999 ஆம் வருடம் சரியாகச் சொல்லப் போனால் நான் பிறந்த அடுத்த வருடம். ஐயா வ.வே.சு எழுதிய ஒரு அற்புதமான கவிதை, 17 வருடம் கழிந்து இன்று மீள்பதிவானது. அதனைக் கண்டதும் அவரைத் தாக்கிய அதே ஜோதியா என்பதை அறிகிலேன் ஆனால் எதோ ஒரு ஜோதி என்னையும் தாக்கியது. நானும் அதே சூழலில் நின்று பொழியலாயினேன். இதோ அவ்விரு கவிதைகளும்.

கவிஞர் வ.வே.சு அவர்களின் பாட்டு :

(நாட்டுக்காக உயிர் ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி. 18/07/1999 வந்து இறங்கிய பெட்டிக்காக அன்று என் வரிகளில் வந்தமர்ந்த கண்ணீர் இன்று மறுபடியும் அஞ்சலி மலர்களாகின்றன. )

பெட்டி ஒன்று வந்தது-மனம்
   பேதலித்து நின்றது;
எட்டிப் பார்த்த பெண் விழியின்
   இமையும் நீரில் கனத்தது.

சுற்றி நின்ற பெரியவர்கள்
   சொல்லிழந்து நின்றனர்
உற்றவர்கள் ஓலமிட்டு
   ஒரு குரலில் அழுதனர்.

பெட்டி மீது அலங்காரம்
   பெட்டியோ ஆறடி நிளம்;
கட்டி வைத்த மாலை மீதும்
   களை இழந்த பூக் கோலம்.

உடுப்பணிந்த வீரர்கள்
   ஓரணி வகுத்தனர்
எடுத்து வந்த பெட்டியை
   எதிர் இறக்கி வைத்தனர்.

அன்னை கையைப் பற்றி நின்ற
   ஐந்து வயதுச் சிறுவனோ
அன்னை கை விலக்கியே
   அருகு சென்று பார்த்தனன்.

தந்தை விட்டுச் சென்ற தொப்பி
   தனை எடுத்துத் தலையிலே
வைத்துப் பார்த்து மகிழ்ந்தனன்
   வாழி அன்னை பாரதம் !!

-வவேசு



என் எதிர்ப்பாட்டு :

வைத்த அந்த பாலகன்
   வீர உரைகள் செய்கிறான்
தைத்த இந்தக் குண்டு போன்று
   தடைகள் கோடி நேரினும்
வைத்த கால்பெ யர்த்திடேன்
   வாழி என்றன் பாரதம் !
பொய்த்துப் போன அப்பன் கனவின்
   பொலிவு சேர்க்கப் போகிறேன் !

அழுகை யைவி டுத்திடு
   ஆண்மை நெஞ்சம் தாங்கினேன் !
தொழுது வாழ்தல் வாழ்க்கை அன்று
   துரோக மேம றக்கிலென்
பழுது கண்ட இந்தியா
   பசுமை காண வேண்டுமே
அழுதி ருத்த லபய மன்று
   அன்னை யேயெ ழுந்திராய் !

வீரத் திலகம் இட்டுவை !
   வெற்றி நோக்கிச் செல்லுவேன் !
ஈர மற்ற கயவ ரோடு
   இடியெ னப்பொ ருதுவேன் !
சோர னல்ல உன்மகன்
   சொந்த நாட்டு வீரனின்
தீர ரத்தம் என்று தன்னைத்
   திண்ண மாயு ரைத்தனன் !

அன்னை வந்து பார்த்தனள்
   அழகு முத்தம் வைத்தனள்
தன்னை யங்கு மறந்து நின்ற
   சைன்ய வீரர் பார்த்தனர்
முன்னி ருந்த அப்பனை
   மூண்டி ருந்த நம்கொடி !
வன்மை கொண்ட பாலன் மீது
   வாழ்த்தி வாழ்த்தி நின்றதே !!

-விவேக்பாரதி
28.04.2017

Popular Posts