ராம பவனி

ராம நவமி !
ராம பவனி !

கோதண்ட வில்லெடுத்துக்
கோலமொழிச் சொல்லெடுத்து !
ஸ்ரீராமன் வரும் நேரமே - ரதி
சீதை விழும் நேரமே !

முதல்மாடி தனிலந்த முகை நின்றனள்
   முறுவல்கள் துதிபாட இவன் வந்தனன் !
விதியாலும் விழியாலும் மனம் சேர்ந்தனள்
   வினையாலே துணையாக இவன் வென்றனன் ! (கோதண்ட )

வெள்ளல்லி போலங்கு அவன் நின்றனன்
   வெண்ணிலவுக் கணக்காக இவள் வந்தனள்
உள்ளொளியும் பாய்ந்துவிட தலை சாய்த்தனள் !
   உயர்கண்ட சந்திரனில் இவன் பூத்தனன் ! (கோதண்ட...)

கண்ணாலே கவிதைகள் இவன் செய்தனன்
   காற்றோடு ஒருபாஷை அவள் தந்தனள்
பெண்ணென்னும் ஆணென்னும் பெயர் தீர்ந்தது
   பெருந்தெய்வ அவதார மணம் நேர்ந்தது ! (கோதண்ட...)

ராம் ராம் ! ஜெய் ஜெய்
ராம் ராம் !
ராமா ராமா ! சீதா
ராமா ராமா !

பாடல் : https://soundcloud.com/vivekbharathi/umcmoxqilmnk

- விவேக்பாரதி
12.04.2017

Popular Posts