ஜென் சிந்தனை

ஜென்துறவி ஒருவரிடம் சீடர் கேட்டார்
   " சேர்கின்ற மனத்தீமை அழிப்ப தற்கே
என்னவழி சொல்லிடுக " வென்றார் ! அங்கே
   ஏற்றமிகும் துறவியுமே சம்ம தித்து
முன்னமொரு பானைதனைக் கொணரீ ரென்றார்
   முந்தியவர் பானைகளைக் கொணர்ந்த பின்னர்
"என்னயிதற் குள்ளிருப்ப தெ"ன்று கேட்டார்
   எல்லாரும் ஒன்றுமிலை என்று சொன்னார் !

கூட்டத்துள் ஒருசீடன் மட்டும் வந்து
   "குணமுடைய! இதற்குள்ளே காற்றுண்" டென்றான்
ஊட்டமுடன் பிறர்பின்னால் ஆமாம் என்றார் !
   உயர்ஞானம் கொண்டவரோ மேலும் சொல்வார் !
"மீட்டிதற்குள் இருகின்ற காற்றை யிங்கே
   வெளியேற்றக் கூடிடுமோ?" வென்று கேட்டார்
கூட்டத்தில் உள்ளவர்கள் முடியா தென்றார்
   குறைவில்லா வொருசீடன் முடியு மென்றான் !

"என்செய்வாய் ? செய்"யென்றார் சீடன் வந்தான்
   எடுத்துவந்த நீர்தன்னை உள்ளே விட்டு
" முன்னிருந்த காற்றங்கே இப்போ தில்லை
   முற்றிலுமே தண்ணீர்தான்" என்று சொன்னான் !
ஜென்துறவி  இதுகண்டார் ! "இதுதான் சேதி !
   சேருமனத் தீமைதனை மாய்ப்ப தற்கு
நன்மைதனை உள்செலுத்த வேண்டும்" என்றார்
   நலம்பெற்றார் ! உலகத்தோர் பயன்பெற் றாரே !

-விவேக்பாரதி
06.06.2017

Popular Posts