சக்திக் கவசம்
ஈச னாருடல் இடத்தினை வென்றவள்
பேசற் கரிய பேரொளி யானவள்
சக்தியின் நாமம் சகலரும் சொல்ல
பக்தி மிகுக்கும், பயமது நீங்கிடும்,
செல்வம் குவியும் செறுக்கழிந் தோடிடும்
சொல்லும் சிறக்கும், சொர்க்கமும் அண்டும்,
அண்டம் தன்னை அழகுறக் காக்கும்
கண்ணன் தங்கை காளியின் நாமம்!
கார்முகில் மழையாய்க் கருதரும் வரமே
பார்வதி தேவி பவானி நாமம்!
மங்கலம் சேர்க்கும் மாரியின் நாமம்,
பங்கம் தொலைக்கும் பைரவி நாமம்,
சிங்கம் ஏறிச் சீருலா புரியும்
எங்கள் நாயகி ஈஸ்வரி நாமம்!
மலரிடை மணமாய் மதியிடை ஒளியாய்
கலகம் வருமிடம் காத்திடும் ஒலியாய்
விலங்கு மனமது கனிந்து தெளிய
உலகாண் டிருக்கும் உமையாள் நாமம்!
நாமம் சொல்லி நல்லன வேண்டி
நாமும் அவளை அழைக்கும் நேரம்
தவறா தருகே வருவாள் உமையாள்!
வருக வருக வனமாள் மயிலாள்,
வருக வருக வளர்பூங் குழலாள்,
புவனம் புகழும் புவனேஸ் வரியாள்,
கவலை அழித்துக் கருணை பரப்ப
சிவனார் துணைவி சிலையாள் வருக,
அவனி துதிக்கும் அருளாள் வருக,
அருளிட உமையவள் அனுதினம் வருக
பொருதிட வருதுயர் பொறுமையி லழிக!
மனத்திடை யெழும்பகை மறுகணம் சிதைக!
தனக்கெனும் சுயநலம் தரணியில் அறுக!
புவியிது புதுமையின் புனிதமே புனைக!
தவமெனும் செயல்களால் தவறுகள் குறைக!
எழிலவள் மலைமகள் எதிரினில் வருக!
பொழிலென அருள்மழை பொழிந்திட வருக!
வருக வென்று வாழ்த்தும் கண்கள்
பெருக அருளின் பெருமை எனவரும்
தேவி சக்தி தேசு வாழ்க!
ஏவும் தீமை யாவும் வீழ்க!
கந்தன் தாயின் கைகள் வாழ்க!
குந்தம் வாழ்க! குடையும் வாழ்க!
நம்பி னோரைக் காக்கும் தெய்வம்
அம்பி கைத்தாள் ஆற்றல் வாழ்க!
வாழிய சக்தியின் வானெனும் மாநுதல்
வாழிய சுந்தரி வாழ்வருள் கண்களும்
நாரணன் சோதரி நாயகி வாழிய,
பேரர னாகிடும் பேரொளி வாழிய,
மக்களைக் காத்திடும் மந்திரத் தேவியின்
அக்கறை வாழி, அன்புளம் வாழி!
சக்தியெ யெனுமொலி சாற்றிடும் நாவுகள்
முக்தியில் வாழ்க, முயற்சிகள் வாழ்க,
மேதினி முழுதும் மேன்மைக ளருளும்
மாதவ ளுமையாள் மான்விழி வாழ்க!
ஆகமத் தலைவி ஆர்கழல் வாழி,
ஏகனின் துணைவி எரிதழல் வாழி,
தந்த நாதனின் தாய்சிவ சக்தியென்
சிந்தைக் காக்க! சீர்சிரம் காக்க!
நெற்றிக் கண்ணனின் நேருடல் பாதியென்
நெற்றி காக்க! நிழல்முடி காக்க!
கார்த்தி கையிரு கண்களைக் காக்க!
மூர்க்கக் காளியென் மூக்கினைக் காக்க!
கந்தன் அன்னையென் காதுகள் காக்க!
வந்து நாரணி வாயிதழ் காக்கவே!
கமலையென் கழுத்தினைக் குரல்தனைக் காக்க
குமரியென் கருணைமார் பகங்களைக்
திரிபுரை கடும்வலி புயங்களைக் காக்க
மறைமகள் கரங்களை விரல்களைக் காக்க
வயிரவி கவனமாய் வயிற்றினைக் காக்க
உயர்ந்தவள் இடுப்புடன் கால்களைக் காக்க
த்ரியம்பகி கருத்தொடு முதுகினைக் காக்க
இமயமாள் கடவுளென் தொடைகளைக் காக்க
ஆண்குறி பெண்குறி அம்பிகை காக்க
நாணம் மடம்சிவ நாயகி காக்க
ஏந்திழை காக்க என்னிரு பிட்டம்!
சாந்தசொ ரூபி தாளினைக் காக்க!
முண்டகக் கன்னி முட்டிகள் காக்க!
கண்பல கொண்டாள் கால்விரல் காக்க!
சொல்லிய உறுப்புகள் சுடர்விழி காக்க
சொல்லா தனவெலாம் சுந்தரி காக்க
மானுட மூளை வளரா இடமெலாம்
தானிறை என்றும் சமர்த்துடன் காக்க
காக்கவே காக்க கன்னிகை காக்க!
பார்க்கவே பார்க்க பாவமொ டிக்க!
சரணென் றுரைப்பார் சங்கடந் தீர்க்கும்
வரமென் றுதித்த வாலை வாழ்க!
சங்கரி சரணம்! சக்தியே சரணம்,
மங்கையற் கரசி மானடி சரணம்,
காளி உமாஸ்ரீ கார்த்திகை சரணம்
நாளும் ஆடும் நர்த்தகி சரணம்!
ஆதி பராபரை அருளே சரணம்!!
-விவேக்பாரதி
06.01.2017