பாரதியா மாண்டான் ??

இன்றென தப்பன் மாண்டான்
   இமையவர்ப் பதவி கொண்டான்
சென்றனன் மண்ணை விட்டுச்
   சேர்ந்தனன் விண்ணைத் தொட்டு
மன்னனாம் அவனைக் காணா
   மாதமி ழேங்கு திங்கே
என்றெலாம் சொல்கேட் கின்றேன்
   ஏதடா அவனுக் கழிவு ??

பூவது வாடிப் போகும்
   பூண்டிலை சருகென் றாகும்
நாவிலே இனிக்கு மந்த
   நனிபழம் வீழ்ந்து மாளும்
காவிலே மரமுங் கூட
   கருகிடப் பொசுங்கிப் போகும்
மேவிடும் மண்ணுக் கிங்கு
   மேயழி வுண்டோ சொல்வீர் !

பாரதி மண்தான் ! நாங்கள்
   பாரதி மண்ணைப் பற்றி
வேரென எழுந்து நிற்கும்
   வெறுஞ்செடிக் கூட்டம் ! இங்கே
வேரழி வுற்றால் கூட
   வெறுஞ்செடி தானும் நிற்கக்
காரண மாகிப் போனக்
   கவினுறு மண்ணோ வாழும் !

சக்தியைப் புகழ்ந்தான் ! அந்தச்
   சங்கரன் தம்மை ஏத்திப்
பக்தியில் கண்டான் ! இன்னும்
   பாரதத் தலைவர் பல்லோர்
முக்தியைக் காணப், பாட்டில்
   மூண்டுடன் இறங்கல் சொன்னான் !
இக்கணம் அவரைக் கண்டே
   இன்புறச் சென்று விட்டான் !

பாரதி யாரோ சொல்வீர் ?
   பகருவார் மனிதன் என்று !
பாரதி மனித னல்லன் !
   பாரதி அமர னல்லன் !
மாரது புடைத்து நிற்க
   மன்னிடும் வீரம் ! மற்றும்
நேரெனப் பேசும் வன்மை
   நேத்திர நெருப்பு மன்னான் !

வீரமா சாகும் ? அன்றி
   வித்தகம் மாண்டா போகும் ?
சீரிடும் குருதி தன்னில்
   சிரித்திடும் வன்மை மாளும்?
நீரிவை மாளா தென்றும்
   நிலைத்திடு மென்று சொன்னால்
பாரதி மாண்டா னில்லை
   பகருவன் நானும் கேளீர் !

காதலில் வீரம் வைத்தான் !
   கவிதையில் ஞானம் வைத்தான் !
பாதியை மதிக்கும் வாழ்வைப்
   பாரிலே நிகழ்த்திக் கண்டான் !
வீதியி லிருக்கு மின்னல்
   வீசியே எரிய வேண்டி
நீதிக ளுரைத்தான் ! அந்த
   நினைவினுக் கழிவுண் டாமோ ?

முறுக்கிய மீசை மற்றும்
   முழுத்தலைப் பாகை ! கண்ணில்
உறுமொரு அக்னி ! நெஞ்சை
   உலுக்கிடும் முழக்கப் பேச்சு !
நறுந்தமிழ்க் கவிதை ! என்று
   நலமிகு உருவங் கொண்டான் !
சிறிதிலே புலவன் ! இந்தச்
   சிறப்பினுக் கழிவுண் டாமோ ?

பின்னெவண் அவனுஞ் செத்தான்
   பிதற்றுகி றாரே ! இங்கே
மின்னிடும் எளிமை பாட்டில்
   மிளிருதல் அவனாற் றானே !
பொன்னருஞ் சிந்தின் தந்தை !
   புதுக்கவி படைத்த மன்னன் !
கன்னலாந் தமிழுக் கிங்கே
   கனலுரு கொடுத்து வைத்தான் !

பாரதி மாண்டா னில்லை
   பாக்களில் வாழு கின்றான் !
பாரதி எங்கள் நெஞ்சில்
   படர்ந்தொளிர் வீசு கின்றான் !
பாரதி பாட்டைச் சொன்னால்
   பார்த்திடு வீரே சக்தி,
பாரதி லவனே உள்ளான் !
   பாரதி முழக்கஞ் சொல்வீர் !

-விவேக்பாரதி
12.09.2016

Popular Posts