பா இலக்கணம் - வெண்பா

குறள் வெண்பா :

எழுசீரி லீரடியான் வெண்டளையா னீற்றில்
முழுதடயு மேகுறள்வெண் பா !

நேரிசை வெண்பா :

பதினைந்து சீரான் பகர்வெண் டளையில்
விதியாகச் சொன்ன விகற்ப - மதனொடு
நாலடியான் வந்து நயமாய்த் தனிச்சொல்லின்
பாலமையும் நேரிசைவெண் பா !

இன்னிசை வெண்பா :

பதினைந்து சீரான் பகர்வெண் டளையில்
விதியினைத் தாண்டி விகற்பம் பலவொடு
நாலடியான் வந்திங்கு நாமெளிதாய் யாத்திடுமன்
பாலமையும் இன்னிசைவெண் பா !

சிந்தியல் வெண்பா :

மூன்றடியா னிங்கு முளைக்கும் பதினொருசீர்
தோன்றிடும் வெண்டளையால் தொய்விலா - ஆன்றவர்
பாடியபா சிந்தியல்வெண் பா !

பஃறோடை வெண்பா :

பன்னிரெண் டேயடி பத்திரு ஐந்திலே
பின்னும் தளையும் பிறழாத வெண்டளையால்
ஈரடிக் கோரெதுகை இன்னமுதாய் வந்துவிழ
காரது போல கவியெழுத ஏற்றபா
ஈற்றடி முச்சீரா யேனைய நாற்சீராய்
தோற்றமுடை பாவகையே தொன்மக்க ளாக்கிய
பண்பின்பஃ றோடைவெண் பா !

கலிவெண்பா :

எல்லைய தில்லா எழில்கருத் தாண்டிங்கே
வெல்லக் கவிதை வெகுண் டெழுதிட
இன்னிசை யானும் இயல்நே ரிசையான்
பன்னயம் மேவப் பகர்வெண் டளையால்
எழிலுறச் சொல்லி எளிதென யாக்கப்
பொழிலதைப் போல்கலிவெண் பா !

வெண்கலிப்பா :

வெண்டளை யோடிங்கு வேகக் கலித்தளையும்
அண்டிய வாசிரியத் தளையதும் சேர்ந்து
எல்லைய தற்றதா யெத்தனையோ அடிகளால்
சொல்லும்பா வெண்கலிப் பா !

குறள்வெண் செந்துறை :

ஈரடியான் அளவொத்தே இயங்கிடும் எட்டு
சீருளதே குறள்வெண்செந் துரையென ஆகும் !

வெள்ளொத் தாழிசை :

மூன்றடியா னிங்குயர்ந்து முப்பத்து மூன்றுசீர்
தோன்றிடும் வெண்டளையால் தொய்விலா - ஆன்றவர்
பாடுதல்வெள் ளொத்தா ழிசை

ஈற்றடியில் நாள்மலரும் ஈங்குகா சும்பிறப்பும்
தோற்ற மெடுத்திட தொன்மக்கள் - ஆற்றலொடு
பாடுதல்வெள் ளொத்தா ழிசை

ஒருபொருள்மேல் மூன்றடுக்கி ஓரீற் றடியான்
விரித்துரை செய்கின்ற விந்தை - கருத்துளதாய்ப்
பாடுதல்வெள் ளொத்தா ழிசை !

வெளிவிருத்தம் :

அளவொத்தே எதுகையொடு அமைந்திங்கே யாத்திடுதல் - வெளிவிருத்தம்
உளக்கருத்தை சார்ந்தேதான் உறுகின்ற அடியளவாம் - வெளிவிருத்தம்
அளவடியான் சீரமையும் அழகுமுச்சீ ருங்கொள்ளும் - வெளிவிருத்தம்
தளைவிதியே இல்லாமல் தலைப்படும்வெண் பாவினமே - வெளிவிருத்தம்


-விவேக்பாரதி

Popular Posts