சித்திரக்கவி - ஒற்றுப் பெயர்த்தல்

எங்களூர்ப் பெண்கள் எழிலாடை வாங்கிடவோ
திங்கள் பலமுகம் தீண்டிநிற்கும் - அங்கமர்வோர்
கால மழியும் கவின்சேலை வாங்கும்போழ்
தேலமிடும் நெஞ்சம் எழுந்து !

பொருள் : 1
எங்கள் ஊர்ப் பெண்கள் எழில் ஆடை வாங்கச் சென்றாலோ, திங்கள் (மாதம்) பலவாகும் ! அங்கே அமர்கின்ற ஆடவரது காலம் அழியும் ! கவின் கலை மிகுந்த சேலை வாங்கும் பொழுது, ஒரு ஏலத்தொகை கட்டுவது போன்ற மிகுந்த செலவு நேரும் !

பொருள் : 2
எங்கள் ஊர்ப் பெண்கள் எழில் ஆடை வாங்கச் சென்றாலோ, அவரது முகங்கள் திங்கள் போல ஒளிர்ந்து நம்மைத் தீண்டி நிற்கும். அங்கே அமர்கின்ற யாவருக்கும் அவர் எடுக்கும் அழகைக் காணும் பொழுது காலம் அழியும். (அதாவது நேரம் போவதே தெரியாது) கவின் கலை மிகுந்த சேலை வாங்கும் போழுது, ஏலத்தில் எதையோ வென்றது போல உள்ளம் எழுந்து கூத்தாடும் !

-விவேக்பாரதி
29.10.2016

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி