சுயநலம்

சுயநலத்தில் பொதுநலத்தை விதைத்து விட்டால்
    சுயநலமும் சுகநலமாய் மாறக் கூடும்
பயனுடைய சுயநலத்தை வளர்த்துக் கொண்டால்
    பாருக்குள் பொதுநலமே வளரக் காண்போம்
வியப்பலவோ இச்செய்தி ! எந்த நாளும்
    விசித்திரமாய் இதையெண்ணிச் செய்வோ மானால்
நயமுடைய நலம்விளையும் நாசம் போகும்
    நல்ல சுயநலந்தன்னை வளர்ப்போம்  வாரீர் !

என்தேசம் என்மக்கள் எனது வீடு
    என்னுடைமை என்றெண்ணும் சுயந லத்தால்
நன்றன்றித் தீதென்றும் நடை பெறாது
    நல்லவர்கள் கைசேர்ந்தால் தடை வராது !
இன்றல்ல நேற்றல்ல எந்த நாளும்
    இனியசுய நலங்கொள்வோம் வெற்றி காண்போம்
கன்னலதும் புல்லினமே கடிக்கும் மட்டும்
    கரும்புசுவை யாறறிவார் ? நாம் கரும்பே !!

-விவேக்பாரதி
17.06.2017

Popular Posts