கம்பத்து அடியில்

கம்பத் தடியில் நிற்கின்றேன் நான்
   காதல் கவியோடு ! - அவளை
நம்பிக் காதல் வளர்த்த நெஞ்சம்
   நலியும் வலியோடு !

முன்னம் சென்றவள் ஒருகணம் திரும்பி
   முறுவலித்தால் வாழ்ந்திருப்பேன் !
கன்னல் ஜாடை கண்ணில் காட்டிடக்
   காலின் அடியில் வீழ்ந்திருப்பேன் !
அன்பு நண்பன் இந்தக் காதலை
   அறிவிலாத செயலென்பான் !
என்ன இருந்தும் என்றன் காதல்
   ஏற்கும் வரையில் காத்திருப்பேன் ! (கம்பத் தடியில்...)

வாழ்க்கை என்னைப் மூடா என்கையில்
   வாடிடாமல் நானிருந்தேன் !
ஏழ்மை என்னை நெருங்கும் போதும்
   ஏற்கும் நிலையில் தானிருந்தேன் !
வாழ்வும் தாழ்வும் ஏழ்மை எல்லாம்
   வஞ்சி உருவில் வந்ததனால்
பூழ்தியோடும் புயலினோடும்
   புண் சுமந்தே நான்விழுந்தேன் ! (கம்பத் தடியில்...)

காவல் நிலையம் எந்தத் திசையோ ?
   காதல் நெஞ்சை நான்மீட்க !
சாவுக்குள்ளே வீழ்ந்த பின்பு
   சத்தம் எதனை நான்கேட்க ?
பாவுக்குள்ளும் பாடலுள்ளும்
   பாரம் தன்னை நானடைத்தேன் !
நோவும் கூட மருந்தென்றே நான்
   நுனியில் கண்ணின் நீர்துடைத்தேன் ! (கம்பத் தடியில்...)

பாடல் : https://soundcloud.com/vivekbharathi/n4kncwojerpy

-விவேக்பாரதி
12.04.2017

Popular Posts