சக்திச் சுடர்

அக்கினிக் குஞ்சொன்று கண்டாள் - அதை
  ஆதி பராசக்தி என்னுளில் வைத்தாள் !
கக்கிருள் நீங்கிடக் கண்டேன் - அதில்
  காளி மகாசக்தி நல்லுரு கண்டேன் !
சிக்கெனப் பற்றின ளென்னை - பெரும்
  சீரென நல்லறி வென்னுளி லூட்டிக்
கொக்கொக்கொக் கென்னச் சிரித்தாள் - அவள்
  கொள்ளை அழகினில் என்னை மறந்தேன் !

இன்ன உருவெனச் சொல்லி - அவள்
  இருக்கின்ற தோற்றத்தை யார்சொல்லக் கூடும் ?
பொன்னின் ஒளியெங்க ளன்னை - அற்ப
  போகம் விலக்கும் அறிவெங்க ளன்னை
வன்மைப் பெருக்கெங்க ளன்னை - எழில்
  வனப்பிலெல் லாமிங் கிருப்பளெம் மன்னை
தன்னை யுணருத லன்றி - இந்தத்
  தாயை உணருதல் சாத்திய மன்று !

-விவேக்பாரதி !
20.04.2017

Comments

Popular Posts