ஒளிவிளக்கு

ஓசோன் போச்சே ஓட்டையிலே !
   ஒழுக்கம் போச்சே சேட்டையிலே !
காசும் போச்சே ஊழலிலே !
   கடமை போச்சே சோர்வினிலே !
பாசம் போச்சே சொத்தினிலே !
   பவளம் போச்சே எண்ணெயிலே !
தேசம் போச்சே இருளினிலே !
   தேவை இங்கே ஒளிவிளக்கு !

கமழும் பூவில் வாசமில்லை !
   கடன்தான் உண்டு பாசமில்லை !
குமிழுக் கிங்கே ஆயுளில்லை !
   குகைகள் உண்டு புலிகளில்லை !
தமிழும் இங்கு நாவிலில்லை !
   தாய்மண் காணா நோயுமில்லை !
அமிழ்த்தப் பட்டோர்க் கெழுச்சியில்லை !
   ஆமாம் வேண்டும் ஒளிவிளக்கு !

மரங்கள் உண்டு கற்பனையில் !
   மகிழ்ச்சி யிங்கே விற்பனையில் !
உரங்கள் உண்டு செயற்கையிலே !
   உரிமை உண்டு அயற்கையிலே* !
கரங்கள் எல்லாம் அழுக்கினிலே !
   கடவுள் எல்லாம் வழக்கினிலே !
வரங்கள் எல்லாம் நிலுவையிலே !
   வரத்தான் வேண்டும் ஒளிவிளக்கு !

தீதைச் சாடும் ஒளிவிளக்கு !
...தீயைப் பருகும் ஒளிவிளக்கு !
சூதை மாய்க்கும் ஒளிவிளக்கு !
...சுகத்தை நல்கும் ஒளிவிளக்கு !
வாதை நீக்கும் ஒளிவிளக்கு !
...வாழ்வைக் காட்டும் ஒளிவிளக்கு !
கீதை குர்ஆன் விவிலியத்தின்
...கீற்றாய் வேண்டும் ஒளிவிளக்கு !

அயற்கை = அயல் + கை (அயலான் கை)

-விவேக்பாரதி
23.06.2016

Popular Posts