கொட்டடா பறை !

எட்டு திக்கும் நன்மை எட்டக்
    கொட்டடா பறை - எங்கள்
  ஏழை மக்கள் வாழ்வுக் காகக்
     கொட்டடா பறை !
முட்டு கின்ற தீமை மாயக்
     கொட்டடா பறை - எங்கும்
  முந்து கின்ற நெஞ்சி னோடு
     கொட்டடா பறை
வெட்டுக் கிள்ளைக் கூட்ட மல்ல
      கொட்டடா பறை - நாங்கள்
  வேங்கைக் கூட்டம் வெல்வ மென்று
      கொட்டடா பறை
தட்டு கின்ற ஒலியி டிக்கக்
      கொட்டடா பறை - சூழும்
  தடையு டைக்க மடைதி றக்கக்
      கொட்டடா பறை !

உரிமை வாழ்க வாழ்க வென்று
      கொட்டடா பறை - எங்கள்
  உணர்ச்சி யென்றும் வாழ்க வென்று
      கொட்டடா பறை
அரிய ஆண்மை வாழ்க வென்று
      கொட்டடா பறை - நெஞ்சில்
  அன்பு மட்டும் வாழ்க வென்று
      கொட்டடா பறை
பரிதி யோடு சுற்றி வந்து
      கொட்டடா பறை - தீய
  பண்பு யாவும் தீர்ந்த தென்று
      கொட்டடா பறை !
மரண மென்ன ? அச்ச மில்லை !
      கொட்டடா பறை - வாழ்வில்
  மான மொன்று மட்டு மென்று
      கொட்டடா பறை !

நமையெ திர்க்க வந்த வர்கள்
      ஓட வேண்டுமே - தம்பி
  நல்ல மக்கள் பகைம றந்து
      கூட வேண்டுமே
உமைய ளித்த கவிதை நெஞ்சம்
       வாழ வேண்டுமே - வீர
  உரக்க மெங்கும் கேட்கத் தீமை
      வீழ வேண்டுமே !
தமிழ ரென்ற உயிர்மு ழக்கம்
      கேட்க வேண்டுமே - என்றும்
  தானு ணர்ந்த அறிவி னைவி
      ரிக்க வேண்டுமே
அமைக விந்த மாற்ற மென்று
      கொட்டடா பறை - தம்பி
  அனைவ ருக்கும் யாவும் சேரக்
      கொட்டடா பறை !

-விவேக்பாரதி
27.04.2017

Popular Posts