நெருப்பு

சாதியை எரிக்க வல்ல
   சமத்துவ நெருப்பு தேவை !
ஆதியி லிருந்த தைப்போல்
   அன்பெனும் நெருப்பு செய்வோம் !
நீதியால் நெருப்பு செய்வோம் !
   நிலையுடை நெருப்பு செய்வோம் !
காதலால் கவியால் ஒன்றும்
   கருத்தினால் நெருப்பு செய்வோம் !

வீரமும் வேட்கை யுந்தான்
   விந்தைநற் றிரியா கட்டும்
சாரமும் அறிவும் அத்தீ
   சமைந்திடும் கலனா கட்டும்
ஈரமும் நேய மும்தீ
   இருத்திடும் நெய்யா கட்டும்
காரண மாய்நெ ருப்பு
   கண்களில் கருவா கட்டும் !

உரசலில் தோன்றா தத்தீ
   உயிரிலே தோன்றி டட்டும்
கரத்திலே அதனை ஏந்திக்
   காளையோர் நடந்தி டட்டும் !
அரசுமந் நெருப்பை நன்றாய்
   அனுமதித் துயிர்த்தி டட்டும்
விரைவிலந் நெருப்பு தோன்ற
   வித்தைகள் நடந்தி டட்டும் !!

-விவேக்பாரதி
05.07.2017

Popular Posts