யாரிவர்

காசை நோக்கி நடக்கும் பலரும்
   கடமை தன்னை மறக்கின்றார்
நேசம் பாசம் யாவும் வேண்டி
   நேர்மை நீங்கிப் பறக்கின்றார் !
ஆசை யென்னும் அரக்க னோடே
   அனைவரு மிங்கே பிறக்கின்றார்
ஓசை அடக்கி வாழ்ந்தால் தானே
   ஒருவர் வாழ்வில் சிறக்கின்றார் !!

தெய்வ முண்டு மேலே என்று
   தெளியா தேனோ வாழ்கின்றார் !
உய்யும் வழியைத் தேடித் தேடி
   உய்யா தேனோ வீழ்கின்றார்
அய்யோ வென்றே அலறிக் கதரி
   அழுதே துயரில் ஆழ்கின்றார்
பெய்யா மழையாம் ஒன்றை வேண்டிப்
   பெரிதும் ஏங்கித் தாழ்கின்றார் !!

எதனை வேண்டி ஓடு கின்றோம்
   என்றுங் கூடத் தெளியாமல்
நிதமும் ஓடித் தொலைந்தே போவார்
   நிஜத்தைக் காணா திருக்கின்றார்
புதிதாய்த் தினமும் அடைய விரும்பிப்
   புரளு கின்றார் போகின்றார்
எதையோ வேண்டி எதற்கோ ஓடி
   எடுத்த பிறப்பை முடிக்கின்றார் !!

யார்தா னிவரோ எதுதா னிவர்க்கே
   யாண்டும் வேண்டும் பொருளாமோ ?
போரா டத்தான் புறப்படு கின்றார்
   போராட் டந்தான் எதற்காமோ ?
யார்தா னிவரின் தேவை தன்னை
   யாத்திடு வாரருள் கூட்டிடுவார் ?
போரா டத்தின் முடிவாய் அந்தப்
   பொருளைத் தந்து தேற்றிடுவார் ??

-விவேக்பாரதி
03.07.2016

Popular Posts