அழகர் ஆறிறங்கல்

தங்கக் குதிரையிலே தான்வந்து வைகையிலே
அங்கம் நனைக்க அழகருற - இங்கே
மதுரைமக்கள் நெஞ்சம் மலைபோ லெழுந்து
குதியாட்டம் போடும் குளிர்ந்து !

குளிர்ந்த நதிவைகை குன்றா வளத்தை
அளிக்கும் பொழில்வைகை ஆற்றில் - களியோடு
கள்ளழகர் தானிறங்கும் காட்சி அடடாவோ
பள்ளோ டிணைந்தசையும் பண் !

பண்ணாட சூழ்கின்ற பக்தர்கள் சேர்ந்தாட
கண்ணாட எங்கும் களியாட - எண்டிசையும்
சூழ்ந்த வெயிலாட சூரியனும் தெண்ணென்றே
ஆழ்ந்து மயங்கினான் ஆங்கு !

ஆங்கமைந்த தெய்வத் தழகை விவரிக்க
யாங்கவிதை ஆற்றல் அடைந்திலன் - தேங்கிவரு
மாற்றில் கடல்வாசன் ஆனந்தத் தோடிறங்கக்
போற்றி எழுந்தீயைப் போன்று !

உலகளந்த நாயகன் உச்சி குளிர
மலையிறங்கி வந்து மனிதர் - நிலைமனதில்
கால்வைக்கும் செய்கைக்குக் கற்பனையே என்றிதனை
மால்சொல்லக் கேட்கும் மனம் !

-விவேக்பாரதி
11.05.2017

Comments

Popular Posts