சிவதுதி

சிவாயநம வென்றாலே சிந்தை தெளியும்!
அவாவும் அகன்றே அழியும் - சிவாயநம
வென்னும் பெயரேதான் வெற்றிக் கடித்தளமாம்
என்றும் துதிப்பாய் எழுந்து !

முனைந்தீசன் பாதம் முழுவதுமாய்ப் பற்றின்
வினையெலாம் நீங்கிடுமே! விந்தை! - அனைத்துயிர்க்கும்
அம்மையப்ப னென்றாகும் அத்தன் துணையிருக்கச்
செம்மையே எந்நாளும் செப்பு !

அறிவே சிவநாமம் ஆன்ற பொருளின்
செறிவே சிவநாமம் செப்பாய்! - நெறிபிறழா
நல்வாழ் வளிகின்ற நங்கை உடலானைச்
சொல்லால் தொழுதகற்று சோர்வு !

சாற்றும் பொருளெல்லாம் சங்கரன் பேரன்றி
மாற்றுக் கருத்திலை! மண்ணிலே - ஊற்றெனப்
பொங்கும் கருணைப் பொழிலாவான்! சங்கரனால்
மங்கும் பிழைகள் மனத்து !

அரனே அருளாளன்! ஆனந்தம் தந்து
அரணாய் விளங்கிடும் அன்பன்! - வரமாக
வீடுபே றளிப்பான் வியனுலகை வாழ்விப்பான்
தேடுபே ரருள்கண்டு தேறு !

ஓருருவாய் நின்றான் ஒருமங்கை சேர்ந்திட
ஈருவுவாய் ஆனான் இன்பத்தின் - பேருருவாம்
முக்கண்ணன் நால்வேதம் முந்திக் கொடுத்தனனே
சொக்கனுக்கே பஞ்சாட் சரம் !

-விவேக்பாரதி
15.05.2016

Comments

Popular Posts