வேண்டுவன

பூக்கள் பூக்கின்ற பொழுதுகளை - அதில்
    பூமி விரிகின்ற அழகுகளைப்
பாக்கள் வடிக்கின்ற வரம்வேண்டும் - அதில்
    பாவம் தொலைகின்ற கதிவேண்டும் !
தீக்குள் கிடக்கின்ற வாழ்வகலப் - பல
    திக்கில் நம்தேகம் சென்றுலவக்
காக்கை குருவிகளின் நிலைவேண்டும் - மனம்
    காயம் கழற்றுகிற வரம்வேண்டும் !


நம்மை நாம்நீங்கும் விசைவேண்டும் - புவி
    நாடி நாமென்னும் நசைவேண்டும் !
செம்மை எதுவென்னும் தெளிவுடனே - ஒரு
    செய்கை செய்கின்ற குணம்வேண்டும் !
தம்மைத் தாம்வாழ விடவேண்டும் ! - இத்
    தரணி வாழ்தற்கும் வழிவேண்டும் !
சும்மா இருக்கும்சுகம் வரவேண்டும் ! - அதன்
    சுருதி யாதென்ற றியவேண்டும் !

கால மாற்றங்கள் தாங்கிடவும் - நம்
    கடமை ஏற்றங்கள் செய்திடவும்
நீல வான்கண்டு வியந்திடவும் - அதன்
    நீளம் போல்நெஞ்சம் விரிந்திடவும்
சாலச் சிறந்தவினை செய்திடவும் - பெருஞ்
    சாதி சமயவெறி தீர்ந்திடவும்
கோலச் சொல்கொண்டு கவிதைமழை - தனைக்
    கொட்டு கின்றபெருந் திறம்வேண்டும் !!

-விவேக்பாரதி
26.06.2017

Popular Posts