பூத்திடும் நாளை

வானத்தில் வெள்ளி வெளிச்சம் - வர
   வாட்டம் தொலைந்திடும் நீங்கிடும் அச்சம் !
மோனத் துயில்களும் ஓடும் - மனம்
   மொத்தம் சிலிர்த்தொரு பல்லவி பாடும் !
ஈனக் குளிர்பனி ஏகும் - உடல்
   ஈட்டியைப் போலுறும் ! சோம்பலும் சாகும் !
ஞானக் குளத்திடை நாளும் - விழ
   ஞாலத்தில் உள்ள துயர்களும் மாளும் !

காலை வெளிச்சத்தில் உள்ளே - பல
   கண்ணிய நுண்ணுயிர் சென்றிடும் பிள்ளே !
மேலவை செய்திடும் ஜாலம் - தனில்
   மேனி எழில்பெறும் தேறிடும் கோலம் !
வேலையில் வேகமும் வாய்க்கும் - அது
   வென்றிடும் நேரத் தடைகளை மாய்க்கும் !
சீலமும் நெஞ்சிடைத் துள்ளும் - வளிச்
   சீற்றம் உடலிலும் உள்ளத்தும் கொள்ளும் !

ஓடி விரைந்திடு வாயே - பகல்  
   ஓடிக் களைத்த நீ தூங்கிடு வாயே !
ஏடியென் சின்னக் குழந்தாய் - உனக்கு
   கென்னென்ன வேண்டும் அது எங்கும் கிடைக்கும்
வாடி வதங்குத லின்றி - எழில்
   வட்ட விழிக்குளி மூடுக வொன்றி !
தேடித் துளிர்த்திடுங் காலை - அது
   தேவையெல்லாம் தரும் ! பூத்திடும் நாளை !

-விவேக்பாரதி
26.04.2017

Popular Posts