இறவின் மடியில்


அடடா....
இந்த இரவின் மடியில்

இரவின் மடியில் எனக்கொரு படுக்கை
    இறைவன் அமைக்கின்றான் - அதில்
இறகைப் பதித்தும் பஞ்சைப் பொதித்தும்
    இன்பம் சமைக்கின்றான் !


காற்றில் உலாவும் மேகங்கள் மறையக்
    காதல் தெளிக்கின்றான் - நிறம்
மாற்றி அமைத்து மண்ணை இருட்டி
    மாசுகம் அளிக்கின்றான் !

எத்தனை மாயம் எத்தனை ஜாலம் .
    ஏற்றிக் கொடுக்கின்றான் - அவன்
சித்துகள் எல்லாம் யார்சொலக் கூடும் ?
    சிக்கல் தொடுக்கின்றான் !

பாரம் மிகுந்த நெஞ்சினைத் தாங்கிப்
    பாரம் குறைக்கின்றான் - நல்ல
நேரம் அளித்து நித்திரை தந்து
    நினைவை நிறைக்கின்றான் !


கனவினில் தோன்றிக் கவிதைகள் பேசிக்
    காலம் கழிக்கின்றான் - அட
நனவினிலென் பிறப்பின் காரணம் கேட்டேன்
    நடுவில் விழிக்கின்றான் !


மெய்யறி வென்றால் என்னெனக் கேட்டேன்
    மெய்யை உணரென்றான் ! - இறை
ஐயனே இவையும் எதற்கெனக் கேட்டால்
     என்னுள் புணர்கின்றான் !

-விவேக்பாரதி
20.03.2017

Popular Posts