சங்கர ஓம்

சங்கர சங்கர சங்கரவோம் - சிவ
சங்கர சங்கர சங்கரவோம் !

சங்கடம் நீங்கிட உன்னிருதாள் - யாம்
சட்டெனப் பற்றினம் ஆதிசிவா !
மங்கையி னோடுடல் கொண்டவனே - எமை
   மங்கலம் சூழவே நீயருள்தா !

சூலமு மாடவே சூழ்ந்திருக்கும் - நற்
   சுடர்மணி பூணர வாடிடவே
காலமும் நேரமும் மாட்டுவையே - உன்
   கழல்தனைப் பற்றினம் நீயருள்தா !

மாரனைத் தீயிடைச் சுட்டவனே - எழில்
   மாதவ னோடுடல் உற்றவனே !
பூரண மாகிடும் பொற்பதமே - தொழில்
   புரிந்துனை யேத்துவம் நீயருள்தா !

டம்டம டம்டம டம்டவெனக் - கை
   தங்குமு டுக்கையு மார்த்திடவே
அம்பிகை யாளொடும் ஆடுவையே - உன்
   அருங்கழல் மெச்சினம் நின்னருள்தா !

நந்தியி லேகிடும் சங்கரனே - உயர்
   நாதியும் நீசிவ சங்கரனே
சிந்தையி லாடிடு சங்கரனே - எமை
   சிவநிலை அடைந்திடச் செய்யுவையே !

சங்கர சங்கர சங்கரவோம் - சிவ
சங்கர சங்கர சங்கரவோம்
-விவேக்பாரதி
03.12.2016

Popular Posts