சக்தி ஒளி

உன்னருள் என்னும் ஒளிவர வேண்டும் !
    உன்னதம் யாதென் றுணர்ந்திட வேண்டும் !
நின்னுரு வல்லால் நிஜங்களும் உண்டோ ?
    நித்ய கல்யாணி சங்கரி காளி ! 


கண்களுக் குள்ளே கவிதையின் சுடரைக்
    கங்கெனத் தோற்றிக் கனன்றிடச் செய்வாய் !
பண்களுக் குள்ளும் பாடலி னுள்ளும்
    பவனி வருவதில் பரிட்சயங் கொண்டாய் !

சொல்வி ளங்காப் பொருளென நிற்றல்
    சொக்கும் செய்கை சொலித்திடச் செய்தல் !
வில்லென நெஞ்சை மீட்டி வளைத்தல்
    வித்தையென் றேதான் கொண்டனை காளி !

மின்னலுன் தோற்றம் புயலுமுன் கூந்தல்
    மின்னிச் சுழன்று மிழற்றிடும் தேகம்
கன்னலுன் பேச்சு கவிதையுன் செய்கை
    காலமெல் லாம்புவி ஆட்டிடும் தாயே !

தெளிவுறு சிந்தை தேடித் திரிந்தே
    தேராது வீழுந்தே அயர்ந்திடும் பொழுது
பளீரென என்னை எழுப்பிய தேதோ !
    பார்த்தால் பக்கம் நின்றனை காளி !

என்னநான் செய்தேன் ? எதனைநான் தந்தேன் ?
    எனக்கும் உனக்கும் என்னசம் பந்தம் ?
உன்தழல் தாங்கும் சுள்ளியென் றாக்கி
    உயர்கவி ஜ்வாலை மூட்டுகின் றாயே !

ஏதுநின் சித்தம் ? என்னென்ன செய்வாய் ?
    ஏழையின் கவிக்கூழ் ஏந்திக் குடிப்பாய் !
யாதுமிங் கேநீ என்றவே தாந்தம்
    யானறி திட்டேன் ! யாண்டும்நீ வாழி !

-விவேக்பாரதி
08.06.2017

Comments

Popular Posts