கவிதைக் கயிறு

நில்லா தோடும் காலம் மட்டும்
   நினைத்து நினைத்து நகைக்குது  !
பொல்லா நெஞ்சம் அந்தப் போக்கை
   பொறுக்கா தேனோ பகைக்குது !
புல்லாங் குழலும் புதுப்போர்ப் புயலும்
   புத்திக் குள்ளே அடிக்குது !
எல்லாம் எதற்கோ என்றே பார்த்தால்
   இதயம் கவிதை வடிக்குது !

ஆழிப் பேரலை அகத்தில் தோன்றி
   ஆறாய் மழையாய்த் திரும்புது !
ஊழிக் கூத்தும் உள்ளத் துள்ளே
   உயர்வாய்த் தாழ்வாய் நடக்குது !
நாழி அனைத்தும் இல்லாப் புதிய
   நடுக்கம் வந்து நெறிக்குது !
வாழி என்றே இதனை ஏற்றால்
   வாக்குள் கவிதை அரும்புது !

இதுவோ வேகம் இதுவோ நாதம்
   இதுவோ கீதம் என்றெலாம்
புதிராய் எழுத்த நெஞ்சத் தலைகள்
   புரண்டு கொண்டே இருக்குது !
அதிர்வாய்க் கொஞ்சம் அழகாய்க் கொஞ்சம்
   அமைதி கொஞ்சம் என்றெலாம்
மதியுள் நேரும் கவிதா ஆட்டம்
   மலரைப் போலே மாற்றுது !

மவுனக் குளத்தில் கல்லை எறிந்து
   மல்லி கைபோல் சிரிக்குது !
தவிக்க விட்டுத் தண்ணீர் தந்து
   தானாய் நன்றாய் நடிக்குது !
கவிழ்த்து விட்ட மேகம் போலக்
   காராய் சிலபோழ் திறங்குது !
கவிதை மட்டும் சிலநே ரத்தில்
   காக்க வைத்தே உறங்குது !

மாயம் மந்த்ரம் சாயம் எல்லாம்
   மாற்றி மாற்றி காட்டுது !
காயத் தின்மேல் கருத்தைப் பூசிக்
   கவலை தன்னைப் போக்குது !
தாயம் விழுமோ துடிக்க வைத்துத்
   தவிக்க வைத்துச் சிரிக்குது !
ஓயா தாட்டும் இதுதான் என்ன ?
   ஒன்றும் விளங்கா திருக்குது !

கவிதை
உயிரைக் கயிறாய்த் திரிக்குது !

-விவேக்பாரதி
05.07.2017

Popular Posts