புயலமைதி

எங்கெல்லாம் புயலமைதி எதிர்கொள்வீர் ? அச்சொல்லில்
தங்குகின்ற பொருளதுவுந் தானென்ன ? எனக்கேட்டால்
இங்குவரும் சிலநிகழ்வில் இருபதையும் பாருங்கள் !
அங்கெல்லாம் புயலமைதி அமைந்தவிதம் கேளுங்கள் !

சாம்பகதூர் மானக்‌ஷா சாவறியா ராணுவத்தில்
தாம்பெரிய அதிகாரி ! தனியாக குஜராத்தில்
ஆம்புதிய உரைதந்தார் ! அங்குள்ளோர் குஜராத்தி
யாம்கேட்க வேண்டுமென யாவருமே கூச்சலிட்டர் !

அவருடனே இதுசொன்னார் ! "அன்புடையீர் நானிங்கே
தவரில்லா பஞ்சாபி சீக்கியரின் பால்கற்றேன்
கவித்தமிழை மதராசின் காளையரின் பால்கற்றேன்
நவமராட்டி மராட்டியர் நல்லவிதம் தந்தனரே !

நான்கற்றுப் பேசிடவும் நயவுரைகள் செய்திடவுந்
தானங்கு குஜராத்தின் தனிவீரன் ஒருவனில்லை !
நானும்வே றென்செய்வேன் ? நல்லோரே" எனக்கேட்டார் !
வான்கண்ட புயலமைதி வந்ததந்த மேடையிலே !

விடுதலையைப் பெற்றவுடன் வியந்திருந்த பாரதத்தின்
குடியரசின் அமைச்சரென குணநேரு வந்தமர்ந்தார் !
"கடிதெனவே நம்நாட்டைக் காவல்தான் செய்திடவே
அடுத்துமுதல் ராணுவத்தின் அதிகாரி யாரென்றார்" ?

எல்லோரும் சிந்தித்தார் ! "ஏற்றிதனை வழிநடத்த
வல்லவராய் யாருள்ளார் வளர்கின்ற அனுபவந்தான்
இல்லையென்ற காரணத்தால் இங்கிலாந்து வீரர்தமை
எல்லையெழும் படைத்தலைமை ஏற்றிடலா" மெனச்சொன்னார் !

வந்திருந்தோர் அனைவருமே வாலாட்ட ! அங்கொருவர்
முந்திவந்து சிலவார்த்தை முகிழ்கின்றார் ! " நேரூஜீ !
இந்தியாவில் அரசுக்கும் இலையன்றோ அனுபவந்தான் !
நந்தலைமை பரங்கியனை நன்கேற்கச் சொல்லுவமா ?"

எனக்கேட்டு நின்றுவிட்டார் ஏறிநின்ற நேருவுக்கு
மனதெல்லாம் படபப்பு ! மற்றவர்க்கு பெருவியப்பு !
வினவியவர் கரியப்ப வீரரையே முன்மொழிந்தார்
நனவாக நின்றதெலாம் நன்றான புயலமைதி !

வியப்பெனவும் மற்றவர்க்கு வீச்செனவுந் திகழ்கின்ற
வயமுடைய செய்கைகளை வன்முறைதான் தோன்றாது
நயமுறவே சொல்லுகின்ற நல்லவினை வெளிப்பாட்டால்
புயலமைதி பிறக்கிறது ! புதுவிதமா யினிக்கிறது !

-விவேக்பாரதி
17.04.2017

Comments

Popular Posts