நான் யார்?

நான் யாரெனக் கேட்டொரு ஞானவொளி
என் காதினிலே
ஒரு கேள்வி தரும்
அந்தக் கேள்வியிலே
பல வேள்வி எழும்
அதன் ஜ்வாலைகள் விடைகள்
நூறு தரும்!!

பார்ப்பதை எல்லாம் பாடுபவன் எனப்
   பாடல்கள் வந்தென் பெயருரைக்கும்
ஈர்ப்பதை எல்லாம் எழுதுபவன் என
   இன்பம் தருங்கவி எனையுரைக்கும்
ஆர்த்திடுவான் கொஞ்சம் அடங்கிடுவான்  என
   ஆன்ம பலமென்னை அணைத்துரைக்கும்
வேர்த்திடுவான் கொஞ்சம் வெதும்பிடுவான்  என
   வேஷ மனமெனை இழிந்துரைக்கும்!!

நான் யாரெனக் கேட்டொரு ஞானவொளி
என் காதினிலே
ஒரு கேள்வி தரும்
அந்தக் கேள்வியிலே
பல வேள்வி எழும்
அதன் ஜ்வாலைகள் விடைகள்
நூறு தரும்!!

அன்பினுக்காக ஏங்குபவன்  என
   ஆகிடும் வயதும் எனையுரைக்கும்
துன்பமும் இன்பமும் சமமெனச் சொல்லும்
   துஷ்டன் இவனென அறிவுரைக்கும்
முன் பிறந்திருக்க வேண்டும் இவனொரு
   மூடன் என்றே இந்தவூர் உரைக்கும்
வென்றிடுவான் என்றும் நின்றிடுவான் என
   வந்திடும் கவிதை எனையுரைக்கும்!!

நான் யாரெனக் கேட்டொரு ஞானவொளி
என் காதினிலே
ஒரு கேள்வி தரும்
அந்தக் கேள்வியிலே
பல வேள்வி எழும்
அதன் ஜ்வாலைகள் விடைகள்
நூறு தரும்!!

-விவேக்பாரதி
23.07.2017

Comments

Popular Posts