ஓவியம்

செந்நிறம் எடுத்து வந்து
   செழுமையாம் பசுமை சேர்த்து
நந்நிலம் கிழித்துப் போகும்
   நதிகளில் நீலம் அள்ளி
துந்நுணன் மாலை நண்பன்
   தூரிகை ஏதும் இன்றி
பன்னிடும் அற்புதம் தான்
   பளிச்சிடும் அந்தி ஓவம் !

மேடென இன்பம் தந்து
   மேல்விழும் துன்பும் தந்து
காடென சிலபோது ஆக்கிக்
   கவின்மலர் சோலை ஆக்கி
வீடென வாசல் என்ன
   விரிந்திடும் இறைவன் என்பான்
கோடிடும் வாழ்க்கை ஓவம்
   கொள்கைகள் நிறங்கள் ஆகும் !

அணியெனும் அழகு சேர்த்தும்
   அமைப்பினில் புதுனை கோத்தும்
மணியென வார்த்தைச் சொர்க்கம்
   மனத்தினில் விரிய வைத்தும்
கணக்கிடும் கவிஞன் ஓவம்
   கவிதையில் விரிதல் கண்டோம்
மணந்திடும் ஓவி யங்கள்
   மண்ணிதை இயக்கு தென்போம் !!

-விவேக்பாரதி
08.08.2017

Comments

Popular Posts