எழுப்பும் பாவம்

விடிந்தது கூடத் தெரியாமல் - இவள்
    வியர்வை வழிந்திடத் துயில்கின்றாள்
முடிந்தது இரவென அறியாமல் - புது
    முகையினைப் போலிவள் துயில்கின்றாள்
நெடுந்தொலைவான இரவினிலே - இருள்
    நீட்டிக் கிடந்தவப் பொழுதினிலே
உடலால் மின்னிய ஊமையினாள் - இவ்
    உலகம் மறந்து தூங்குகின்றாள் !


பள்ளி எழுச்சியைப் பாடிடவும் - இவள்
    பவள விழிநகை பார்த்திடவும்
துள்ளி எழுந்திவள் நடைபயில - இடை
    துவங்கும் நாட்டியம் கண்டிடவும்
கொள்ளை இரவினில் ரசித்தவர்க்கு - இக்
    கொடிய காலையில் நேரமில்லை
பிள்ளை போலத் தூங்குகிறாள் - தன்
    பீடை மறந்து தூங்குகிறாள் !

இரவை ஈரம் செய்திருந்தாள் - அதில்
    இன்பம் கண்ட மனிதரெலாம்
பரவும் காலைப் பொழுதினிலே - தன்
    பணியை வாழ்வைப் பார்த்தபடி !
விரவிய ஈரம் காயவில்லை - இவள்
    விருந்திட்ட இன்பம் தீரவில்லை
பிரிவினையால் இவள் வருந்தவில்லை - தினம்
    புலர்வதும் புணர்வதும் முடிவதில்லை !

ராத்திரி நேரத் தேவதையாள் - பலர்
    ரசிப்புக்கு மட்டும் தேவையினாள் !
பூத்திருக்கின்ற மல்லிகையாள் - வாடிப்
    புதிதாய்த் தேயும் தன்மையினாள் !
கோத்திடும் மீனினக் கூட்டத்திலே - தன்
    கொள்கையில் மின்னும் அம்புலியாம் !
பார்த்து ரசித்திடத் தூங்குகிறாள் - இப்
    பாவையை எழுப்பல் பாவமன்றோ !!!!

-விவேக்பாரதி
11.08.2017

Comments

Popular Posts