நட்பு வாழ்க

வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்
      வாழ்க்கையே நீயாகிறாய் 
  வலிப்போக்க நாளுமே காற்றாக வருகிறாய்
     வலிமைகள் நீதருகிறாய்!
பொழுதுகளைப் போக்கிடும் சொந்தமாய் வருகிறாய்
     பொழுதே உனக்கு என்கிறாய்
  பொன்போல இளைஞர்கள் காக்கின்ற நட்பாகிப்
     போகங்கள் நீயாகிறாய்!!
அழிகின்ற ஞாபகத்து அலைகளில் நீமட்டும்
      அசையாத பாறையாவாய் 
  அனுபவம் என்கின்ற பாடத்தின் சாரத்தில்
      அண்டத்தைச் சொல்லி நிற்பாய்!
பொழிகின்ற அன்புமழை மேகமே நட்பே
      போற்றியை நான் இசைப்பேன் 
  போதையாய்ப் பாதையாய் யாவுமாய் ஆகிடும்
      பொலிவான நட்பு வாழ்க!!

-விவேக்பாரதி
06.08.2017

Comments

Popular Posts