புதுவெம்பாவை - பெட்டிக் குடிலுக்குள்


2) பெட்டிக் குடிலுக்குள்...

பெட்டிக் குடிலுக்குள் பேதாய் நிலவேபோல்
நெட்டைத் துயிலை நிகழ்த்திக் கிடப்பாயோ?
வட்ட வயிற்றன் வனப்புடைய தந்தத்தான்
எட்டி மனைநெருங்கும் ஏற்புடைய நாளெண்ணி,   
வெட்ட வெளியில் வெயிலிறைவன் மென்கதிரால்
தொட்டு விரிக்கச் சுடர்வீசும் தாமரையின்
மட்டவிழ்ந்து பாய்ந்து மணங்கொடுக்குந் தண்ணீரில்
இட்டமொடு நீராடி இன்புறுவோ மெம்பாவாய்!!

கருத்து

அடி பேதையே! பெட்டிபோலக் காட்சி அளிக்கின்ற சின்னச் சின்ன அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அறைகளுக்குள், வானத்து நிலவைப் போல நீண்ட தூக்கத்தை இன்னும் நிகழ்த்திக் கொண்டு கிடப்பாயோ? வெட்ட வெளியில் வெயில் எனும் வரத்தினைக் கொடுக்கும் இறைவனான சூரிய பகவானின் மென்மையான கதிர்கள் தொட்டு விரிக்க, ஒளிச்சுடர் வீசும் தாமரை மலர் மலர்கின்றது. அதிலிருந்து தேனும் அவிழ்ந்து பாய்ந்து தண்ணீர் எங்கும் தாமரைத் தேனின் மணம் நிலைக்கின்றது. என் பாவையே! அத்தகு நீரில் நாம் நமது இஷ்டம்போல் நீராடியபடியே, வட்டமான பானை வயிற்றை உடையவன். அழகு மிகுந்த தந்தங்களைக் கொண்டவன். எட்டி வந்து நமது வீட்டின் வாசலைச் சேரும் திருநாளை எண்ணி இன்புறுவோம்.

-விவேக்பாரதி
17.12.2017Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி