மோக தேவதை

மோக தேவதை - புது
ராகமாலிகை !

நெஞ்சக் கனலின் நெருப்பை - தன்
    நெளியும் உடல்மேல் விருப்பைக்
கொஞ்சம் கேட்டுச் சிரிப்பாள் - தன்
    கொவ்வைச் செவ்விதழ் விரிப்பாள்!


மச்சத்தாலே கிளர்த்தி - உயிர்
    மயிர்க்கூச்சத்தை நிகழ்த்தி
உச்ச சொர்க்கம் புகுத்தி - எனை
    உரித்துத் தின்னும் ஒருத்தி!


தங்க நிறத்தில் கூந்தல் - மனம்
    தழுவும் இவளோர் ஏஞ்சல்
அங்கத் தளவோ ரம்பை - பல்
    அடுக்கு வரிசைத் தும்பை! 


ரதியைப் போன்ற வளைவு - பல
    ரசனைக் கேற்ற விளைவு
நதியைப் போன்ற நடப்பு - இவள்
    நகர்ந்தாலே படபடப்பு!


செக்கச் சிவந்த இதழ்கள் - பலர்
    சேர்ந்து புகழ்ந்த இதழ்க்கள்
சிக்கென் றிருக்கும் இடுப்பு - எனைச்
    சிதையி லேற்றிடும் அடுப்பு! 


இவள்
மோக தேவதை - புது
ராகமாலிகை!-விவேக்பாரதி 
29.08.2017Comments

Popular Posts