தமிழி

தமிழியெனில் தாரணியில் தானாய் வளர்ந்த
தமிழணங்குக் கின்னொரு பேர்!

அவளுக்குத் தமிழி எனப்பேர் - நம்
   ஆவியில் இனிக்கும் தனிப்பேர்! 
பவளக் கொடியென இடையாள் - செழும் 
   பாடல் புரண்டிடும் உடையாள்! 
கவிதை, கட்டுரை, கதைகள் ,- கோடி 
   கற்பனை, அற்புத வகைகள்,
அவளது விலாச மாகும் - எழில் 
   அவளது சுபாவ மாகும்! 

முன்னைப் புலவரின் வாயில் - தனி 
   முக்தியைக் கண்டவள்! பின்னாள்  
மின்னை நிகர்த்துரு கொண்டு - பழி 
   மிரட்டி அடித்திட நின்றாள்!
அன்னை இளையவள் கண்டாய்! - அவள் 
   அகவை பழையது கண்டாய்!
என்றும் இனித்திடும் தமிழி - தன்னுள் 
   ஏழிசை காட்டிடும் குமரி!

ஏடுகள் ஆயிரம் கொண்டாள்! - புகழ்
   ஏற்றத்திலே யிவள் நின்றாள்!
பாடிடும் பாடலில் எல்லாம் - தன் 
   பளிங்குரு காட்டுவ மென்பாள்!
நாடுகள் போற்றிடும் நங்கை! - நம் 
   நாவினில் வாழ்ந்திடும் மங்கை!
கூடிடும் அமிழ்தென வந்தாள், - மனம் 
   குலவிட மாயமும் செய்வாள்!
 

அழகுடையவள் இத் தமிழி - புவி 
   அன்புறப் போற்றிடும் அழகி!
பழகுதற் கினியவள் தமிழி - நம் 
   பார்வைக்கெந் நாளும் குமரி!
மொழியிவள் உயிர்களின் நாதம்! - உரு 
   முழுமை பொருந்திய வேதம்!
வழியிவள் வாழ்வியற் கூறு! - மிக 
    வளமுடை யாளிம் மாது! 

வாழிய தமிழியின் ஆற்றல் - மக்கள் 
   வாழ்த்துக தமிழியை நாளும் 
வாழிய தமிழரின் பேச்சு - இவள் 
   வாழுக தமிழரின் பேச்சில்! 
வாழிய தமிழியின் ஓசை - என்றும் 
   வாழிய தமிழியின் பூசை! 
வாழிய வாழிய தமிழி - அருள் 
   வண்ணக் களஞ்சியக் குமரி!! 

 -விவேக்பாரதி 
18.12.2017
 
 

Comments

Popular Posts