படுத்தும் குமாரி

மாலைப் பொழுதினிலே - இணைய
    மண்டபம் மீதினிலே
காலங் கழித்திருந்தேன் - மாயக்
    கன்னி உருவில்வந்தாள்!
நீல உடையணிந்தாள் - விழியில்
    நித்தில ஜோதிகொண்டாள்
கோல மொழியழகி - மனத்தைக்
    கொதிக்க வைத்துவிட்டாள்!

பார்த்துப் பழகியநாள் - தனிலே
    பாரா மயக்கமெல்லாம்
சேர்த்து படுத்திவிட்டாள் - அம்மம்மா
    செத்து விழுந்துவிட்டேன்!
ஆர்த்துச் சிரித்திருந்தாள் - நகை
    ஆக்கிய இன்னிசையில்
வார்த்த உயிர்பிடித்தே - மீண்டும்
    வாழ்வுற் றெழுந்துவிட்டேன்!

சொல்லில் புதிருடையாள்! - மிகச்
    சுந்தரத் தேன்குரலாள்!
வில்லின் புருவத்தினாள்! - மனத்தை
    விசைகொண் டடித்துவிட்டாள்!
அல்லின் விசும்பெனவே - தெளிவும்
    அறிவும் கருமையுற
வில்லியைப் போல்மறைந்தாள் - அம்மம்மா
    வீழ்ந்தேன் மறுபடியும்!

என்ன புரிந்திடுவாள் - இன்னும்வே
    றென்ன புதிர்விடுப்பாள்
என்ன மொழிந்திடுவாள் - இன்னும்வே
    றென்னென்ன பேசவைப்பாள்
என்ன சுமைகொடுப்பாள் - அதில்
    எப்படிச் சுகம்படைப்பாள்
ஒன்றும் விளங்கவில்லை - மோகம்
    ஓங்கி வளந்ததுகாண்!

மோகனப் பேச்சினிலே - அவள்தான்
    மோகத்தைத் தூண்டிவிட்டாள் !
வாகன மாய்மனத்தைச் - செலுத்தி
    வாட்டம் மிகவிசைத்தாள்!
தாக மெடுத்தவன்போல் - அடடா
    தத்தித் தவிக்கவைத்தாள்!
வேக மெடுத்தகணை - போலென்
    வேரினில் பாய்ந்துவிட்டாள்!

உச்சந் தலைசுடவும், - தனலாய்
    உள்ளம் எரியுறவும்,
அச்சம் மிகப்படவும், - பரிசாம்
   அறிவு மறந்திடவும்,
நச்சு மதுமொழியாள்! - உள
    நசையின் வடிவத்தினாள்!
இச்சை பெருக்கிவிட்டாள்! - அழியா
    இன்பத்தில் ஆழ்த்திவிட்டாள்!

ஆட வைத்துவிட்டாள்! - என்றன்
    ஆவியைக் கிள்ளிவிட்டாள்!
பாடும் செயலுக்குள்ளே - கவலைப்
    படவும் வைத்துவிட்டாள்!
கூடிக் களிப்பதுபோல் - இன்பம்
   கொண்டு கலப்பதுபோல்
ஜோடிக்கும் கனவுதந்தே - மின்போல்
   ஜோதி மறைத்துவிட்டாள்!

இவளை அணைப்பதுவா? - அணைத்தென்
    இதயம் கொடுப்பதுவா?
கவலை மறந்தவனாய் - இவள்மேல்
    காதல் இயற்றுவதா?
இவளைத் தள்ளுவதா? - பேயாய்
    இழிந்து சொல்லுவதோ
துவளப் புல்லுவதோ? - விடைகள்
   தோன்று தில்லையம்மா!

காற்றின் பிம்பமெல்லாம் - கைகள்
    கட்டிச் சிரிக்குதம்மா!
ஆற்றல் கொண்டவிசை - எனை
    அண்டி நெருக்குதம்மா!
சேற்றில் கல்லெனவே - குழப்பம்
    சேர்ந்து படுத்துதம்மா
மாற்றும் வழியறியா - மனந்தான்
    மாண்டு துடிக்குதம்மா!

பாவைக் குமரியம்மா - வந்தவள்
    பர்வத குமரியம்மா!
தேவர் உலகத்திலே - வாழும்
    தேனிசைத் தேவியம்மா!
ஆவல் படைத்துவிட்டாள்! - குழப்பம்
    ஆக்கி நகர்ந்துவிட்டாள்!
காவல் துணைகேட்க - மறந்தேன்
    காளி விலாசத்தையே!!

-விவேக்பாரதி
12.12.2017

Comments

Popular Posts